90% கடைகளில் இனி UPI கிடையாது.. பெங்களூரில் ஷாக் சம்பவம்.. மீண்டும் கேஷ் பயன்பாட்டிற்கு போன கடைகள்
பெங்களூர்: இந்தியாவில் யு.பி.ஐ தீவிரமாக பயன்படுத்தப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். தற்போது அங்கே முழுக்க முழுக்க 90% சிறு - குறு கடைகளில் யு.பி.ஐ சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் யு.பி.ஐ மூலம் வருவாயை கண்டறிந்து.. இந்த நோட்டீசை அனுப்பி உள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல வணிகர்கள் பணப் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

2021-22 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளின் யுபிஐ (UPI) மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டும் ரூ.20 லட்சம் (சேவைகள்) அல்லது ரூ.40 லட்சம் (சரக்குகள்) வர்த்தகம் செய்தவர்களுக்கு, பதிவு மற்றும் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யுபிஐ - பணப் பரிவர்த்தனை
பணப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொண்டால் ஜிஎஸ்டி-யிலிருந்து தப்பிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனை தரவுகள் மூலம் வணிகத்தின் அளவை அரசு அறிந்திருக்கிறது. "எந்த வடிவில் வருமானம் வந்தாலும், வரி விதிக்கக்கூடிய வருவாய் மீது ஜிஎஸ்டி பொருந்தும்" என்று வணிக வரித்துறை ஜூலை 2025-ல் ஒரு தெளிவுபடுத்தலில் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள் மற்றும் சிறிய கடைகள் உட்பட பல விற்பனையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பல கடைகளில் "யுபிஐ இல்லை" என்ற அறிவிப்பு பலகையை காண முடிகிறது. ஆனால், இது தவறான அணுகுமுறை என்று வரி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பணமாகப் பெற்றாலும், டிஜிட்டல் முறையில் பெற்றாலும் வருமானத்தை கணக்கிடும்போது ஜிஎஸ்டி-யில் காட்ட வேண்டும்.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் (உதாரணமாக பழங்கள், ரொட்டி) விற்பனை செய்பவர்களுக்கு வழிகாட்டவும், சரியான வரி மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், மறைக்கப்பட்ட வருவாயை வெளிக்கொணரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூலை 25, 2025 அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தன்னிச்சையாகவும், அதிகப்படியாகவும் வரி விதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறு, குறு கடைகளில் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ மூலம் வருமான வரித்துறையினர் பல கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளனர். அதாவது இத்தனை காலமாக சிறு, குறு கடைகள் பல லட்சம் வருவாய் ஈட்டினாலும் கூட வரி கட்டுவது இல்லை.
ஏனென்றால் அவர்களின் வருமானத்தை கணக்கிட முடியாது, உறுதி செய்ய முடியாது. அவர்கள் பல லட்சங்களை வருமானமாக ஈட்டினாலும் கூட வரி போட முடியாது. இப்போது யு. பி.ஐ வந்துவிட்டதால், அவர்களின் வருமானத்தை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. இதன் காரணமாக தற்போது சிறு, குறு கடைகளில் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ மூலம் வருமான வரித்துறையினர் பல கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளனர்.
யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்க மறுப்பு
இதன்காரணமாக சிறு, குறு கடைகள் யு.பி.ஐ பரிவர்த்தனைகளை ஏற்க மறுத்துள்ளன. வரி விதிப்பை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. உதாரணமாக கர்நாடகாவில் ஜிஎஸ்டி ஏய்ப்பு நோட்டீஸ்கள் காரணமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. மே மாதத்தில் நாட்டின் மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 7.73% கர்நாடகாவில் நடந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மாநிலம் மகாராஷ்டிராவுக்கு (13.19%) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்தது.
கர்நாடக வணிக வரித் துறையானது, ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் வருமானம் இருந்தும் ஜிஎஸ்டி செலுத்தாத வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க தயக்கம் காட்டி வருகின்றனர். பெங்களூருவில் சிலர் யுபிஐ கியூஆர் (QR) குறியீடு ஸ்டிக்கர்களை கடைகளில் இருந்து அகற்றியும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications