ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரி ஊழியரை கொலை செய்த இளைஞர்! கர்நாடகாவில் பயங்கரம்
ஹேமந்த் தத்துக்கு வேலை கிடைத்தாலும் ஐபோன் வாங்கும் அளவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐபோன் ஆர்டர் செய்துவிட்டு அதை வாங்க பணம் இல்லாததால் டெலிவரி செய்ய வந்த ஊழியரை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் அர்சிகெரே நகரை சேர்ந்தவர் 20 வயது இளைஞர் ஹேமநாத் தத். இவருக்கு கடந்த சில நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அதை வாங்கும் அளவுக்கு போதுமான பணம் இல்லை. வெளியில் வேலை தேடி அலைந்த ஹேமநாத் தத்துக்கு வேலை கிடைத்தாலும் ஐபோன் வாங்கும் அளவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஐபோன் ஆசை அவரை விடவில்லை.
சரி முதலில் போனை வாங்கிவிட்டு டெலிவரி ஊழியரை ஏமாற்றிவிடலாம் என்று தத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக பிளிப்கார்ட்டில் ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஐபோனை ஆர்டர் செய்திருக்கிறார். இவர் எதிர்பார்த்ததை போல பிப்ரவரி 7ம் தேதி ஐபோன் டெலிவரி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் இ-கார்ட் டெலிவரி ஊழியரான நாயக் எனும் இளைஞர் தத்தின் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஐபோன்
ஐபோனை பெற்றுக்கொண்ட தத், பணம் தராமல் ஏதேதோ பேசியுள்ளார். நாயக் பணத்தை கறாராக கேட்கையில் ஆத்திரமடைந்த தத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக நாயக்கின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலே நாயக் சரிந்து விழ அவரை தூக்கி வீட்டின் உள் அறையில் படுக்க வைத்துள்ளார் தத். சில நிமிடங்களில் நாயக்கின் மூச்சு நின்றுவிட்டது. தத் ரத்தக்கறை படிந்த கையுடன் நாயக்கை பார்த்தவாறு வெறுமென நின்றுகொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பியதையடுத்து இக்கொலை மறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார்.

திட்டம்
சம்பவத்தன்று இரவு ஆளில்லா ரயில்வே டிராக் அருகே உடலை கொண்டு சென்று எரித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார். ஆனால் அன்று இரவு தெருக்களில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் திட்டத்தை சாத்தியப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து பிப்ரவரி 8ம் தேதி இரவு திட்டமிட்டபடி நாயக்கின் உடலை சாக்கு பையில் கட்டி அதனை பைக்கில் வைத்து ரயில்வே டிராக்கிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து எரித்திருக்கிறார். இதற்கிடையில் தனது மகனை இரண்டு நாட்களாக காணவில்லை என்று நாயக்கின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணை
இந்நிலையில் ரயில்வே டிராக் அருகே மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கடந்த 16ம் தேதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து எலும்புக்கூடுகளை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மறுபுறம் காணாமல் போனவர்களின் பட்டியலையும் சரிபார்க்க தொடங்கினர். தடயவியல் ஆய்வில் எலும்புக்கூடு 20-22 வயதுடைய ஆணுக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டதது. இந்த அறிக்கையுடன் காணாமல் போனதாக நாயக்கின் தாயார் கொடுத்த புகாரும் ஒத்துப்போயுள்ளது. இதனையடுத்து நாயக் எங்கு வேலை செய்தார்? பணியில் யாருடனாவது முன் விரோதம் இருந்திருக்கிறதா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தனர்.

கடைசி ஆர்டர்
விசாரணையில் மேற்குறிப்பிட்ட எந்த பிரச்னையும் நாயக்குக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே கடைசியாக டெலிவரி யாருக்கு பொருளை டெலிவரி செய்தார்? என்பதை தேடியுள்ளனர். அப்போதுதான் ஹேமநாத் தத்தின் பெயர் வெளிவந்துள்ளது. அவரிடம் விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதெல்லாம் சரிப்பட்டு வராது என ஹேமநாத் தத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் தத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஐபோன் வாங்க போதுமான பணம் இல்லாததால்தான் நாயக்கை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

கொலை
அதேபோல நாயக்கின் உடலை எரிக்க பாட்டிலில் பெட்ரோல் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. நாயக்கின் உடலை அவர் பைக்கில் வைத்து ரயில்வே டிராக்கிற்கு கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹேமந்த் தத்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஐபோனுக்காக டெலிவரி ஊழியரை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications