காவிரிக்கு ஆரத்தி எடுத்த 24 மணி நேரத்தில்.. கொட்டும் மழை.. பல மாதங்களுக்கு பிறகு குளிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: வாரணாசியின் கங்கை ஆரத்தியை முன்மாதிரியாகக் கொண்டு, பெங்களூரில் முதல் முறையாக காவிரி ஆரத்தி (Cauvery Aarti) நேற்று முன்தினம் (மார்ச் 21) இரவு மல்லேஸ்வரம் அருகேயுள்ள சாங்கீ ஏரியில் நடைபெற்றது. கர்நாடகாவின் முக்கிய நீர் ஆதாரமான காவிரியை போற்றும் வகையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் வாரணாசியிலிருந்து வந்திருந்த பூசாரிகள் தலைமையில் ஊர்வலம், பாரம்பரிய சடங்குகள், லேசர் ஷோ மற்றும் நேரடி இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆரத்தியில், காவிரியின் பிறப்பிடமான பாகமண்டலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தீர்த்தமாக வழங்கப்பட்டது.

இந்த முயற்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறிய BWSSB தலைவர் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ், காவிரி ஆரத்தியை ஆண்டுதோறும் நடத்துவதுடன், பக்தி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கலாச்சார கொண்டாட்டங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த சாங்கீ ஏரி, காவிரியின் கிளை நதியான விருஷபாவதி ஆற்றுடன் தொடர்புடையது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் 'உலக நீர் உறுதிமொழி' பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நீரின் முக்கியத்துவம் மற்றும் நீர் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் நீர் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இது நீர் பாதுகாப்பு முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாக அமைந்தது.

கூட்டத்தில் உரையாற்றிய டி.கே. சிவக்குமார், அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "தண்ணீர் என்பது நாகரீகம், நம்பிக்கை மற்றும் வாழ்வின் அடிப்படை. இன்று காலை நாங்கள் தலைக்காவேரிக்குச் சென்று காவிரி பூஜை செய்து, இந்த நிகழ்வுக்காக புனித நீரை சாங்கி ஏரிக்கு கொண்டு வந்தோம்," என்று அவர் கூறினார்.
பொறுப்பான நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்திய சிவக்குமார், "வறட்சி ஏற்பட்டு கிணறுகள் வறண்டு விடும்போதுதான் நீரின் மதிப்பை நாம் உணர்கிறோம். பெங்களூருவில் காவிரி 5-வது கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு 110 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சவால்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு நகரம் நீர் நெருக்கடியை சந்திக்காது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்றார்.

மேலும், தசரா பண்டிகையின் போது மைசூருவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையிலும் காவிரி ஆரத்தியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிவக்குமார் அறிவித்தார். "பெங்களூருவில் காவிரி ஆரத்தியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த புனித சடங்கை KRS க்கும் விரிவுபடுத்தி, அதை நமது கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 22) மாலை பெங்களூருவில் நல்ல மழை பெய்தது. கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு பெய்த முதல் மழை இதுவாகும். இதனால் பெங்களூரு மக்கள், இந்த பூஜைதான் மழை பெய்யக் காரணம் என்று நம்புகின்றனர். காவிரி ஆரத்தி நடைபெற்ற மறுநாளே மழை பெய்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடும் வெயிலால் அவதிப்பட்ட பெங்களூர் மக்கள் இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications