அடேங்கப்பா.. கர்நாடகாவில் காங்கிரஸில் அதிகரித்த குற்ற பின்னணி வேட்பாளர்கள்.. பாஜக பரவாயில்லையே!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியில் தான் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய முழுதகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, கல்வி தகுதி, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு சேகரித்து வழங்கி வருகிறது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை ஏடிஆர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகா சட்டசபை தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் 2,586 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி தேசிய கட்சியை சேர்ந்த 790 வேட்பாளர்கள், மாநில கட்சியை சேர்ந்த 255 வேட்பாளர்கள், அங்கீகாரம் பெறாத கட்சிகளின் 640 வேட்பாளர்கள், 901 சுயேச்சை வேட்பாளர்களின் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் மொத்தம் 581 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளது. இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் 22 சதவீதமாகும். அதாவது மொத்த வேட்பாளர்களில் 22 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவாகி உள்ளது. இதில் 404 பேர் தீவிரமான கிரிமினல் வழக்கு உள்ளது. இது மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதமாகும்.
தேசிய கட்சி சார்பில் மொத்தம் 795 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அவர்கள் மீது 269 கிரிமினல் வழக்குகளும், 165 தீவிரமான கிரிமினல் வழக்குகளும் பதிவாகி உள்ளது. மாநில கட்சியை பொறுத்தமட்டில் போட்டியிடும் 256 வேட்பாளர்கள் மீது 110 கிரிமினல் வழக்குகளும், 87 தீவிரமான கிரிமினல் வழக்குகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2018 ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும்போது இப்போது கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு இருந்த நிலையில் தற்போது 581 வேட்பாளர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் 122 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இது வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 55 சதவீதமாகும். பாஜகவில் 70 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது அக்கட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 34 சதவீதமாகும். ஜேடிஎஸ் கட்சியில் 48 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அந்த கட்சியின் வேட்பாளர்களில் 23 சதவீதமாகும்.
தீவிரமான கிரிமினல் வழக்குகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியில் 69 வேட்பாளர்கள் மீதும், பாஜகவில் 52 வேட்பாளர்கள் மீதும், ஜேடிஎஸ்ஸில் 30 வேட்பாளர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சியில் தான் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications