ஆபரேஷன் சிந்தூர்: 6 போர் விமானங்களை இழந்த பாகிஸ்தான்.. இந்திய விமானப்படை தளபதி சொன்ன முக்கிய தகவல்
பெங்களூர்: ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ஏபி சிங் கூறினார். ரஷ்யாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு மிக முக்கிய கேடயமாக பாதுகாப்புக்கு விளங்கியதாகவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
இந்த தாக்குதலால் வெகுண்டெழுந்த இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் தளம் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்தது. இதையடுத்து இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீழ்த்தியது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பகிஸ்தானின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் மற்றொரு மிகப்பெரிய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ பி சிங் கூறியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவலை விமானப்படை தளபதி கூறினார்.
கடுமையாக சேதம் அடைந்தன
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி மேலும் பேசியதாவது:- பஹல்காம் தாக்குதலின் தொடர்ச்சியாக கடந்த மே 7 அம் தேதி நடைபெற்ற மோதலின் போது ரஷியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு மிக முக்கிய பங்காற்றியது. பாகிஸ்தானின் வான் பலத்திற்கு விழுந்த பெரிய அடியாக big bird விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது அமைந்தது.
இந்தியாவின் AWACS இதை சுட்டு வீழ்த்தியது. இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. செயற்கை கோள் படங்கள் மட்டும் இன்றி உள்ளூர் ஊடக படங்களும் இதை காட்டுகின்றன" என்றார். இது தொடர்பான செயற்கை கோள் படத்தையும் விமானப்படை தளபதி காட்டினார்.
நுற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
மே 7 க்கு முந்தைய படங்களையும் அதன்பிறகான படங்களையும் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பவல்பூர் முகாமில் ஏற்பட்ட சேதங்களை காட்டினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் உள்ள 8 இடங்களை குறிவைத்து தாக்கியது. இதில் முரிட்கேவில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமை அலுவலகமாக விளங்கியது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்தியா நடத்திய தாக்குதலில் நுற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவிடம் வாங்கிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்திய பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய எப் 16 விமானம் அடங்கும் என்பது தெரியவந்துள்ளது. விமானப்படை தளபதி இதுதொடர்பாக கூறுகையில், "மே 10 ஆம் தேதி பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஜகோபாபத் விமான தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப் 16 ரக போர் விமானங்கள் சிலவும் அழிக்கப்பட்டன" என்றார்.
இந்தியா நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த விமானப்படை தளங்கள் இன்னும் கூட பயன்பாட்டுக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா கொடுத்த பதிலடியால் அரண்டு போன பாகிஸ்தான், உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே மூன்று நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications