இ-பாஸுடன் வந்தாலும் கர்நாடக எல்லையில் விரட்டியடிப்பு.. பரிதவிக்கும் தமிழர்கள்.. முதல்வர் கவனிப்பாரா?
பெங்களூர்: தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் வாகனங்கள் அனைத்தும், மாநில எல்லையிலேயே நிறுத்தி திருப்பி அனுப்பப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் கஷ்டப்பட்டு, இ-பாஸ் வாங்கிக்கொண்டு வந்தவர்களும், கலக்கத்தோடு திரும்பி செல்லும் நிலை நிலவுகிறது.
அவசரத் தேவைகளுக்காக இ பாஸ் பெற்றுக்கொண்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும், பெங்களூருக்கு வாகனங்களில் வரும் வசதி இதுவரை இருந்து வந்தது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, திடீரென கர்நாடக அரசு, முன்னறிவிப்பு ஏதுமின்றி, ஓசூர்-கர்நாடகா எல்லையில் உள்ள அத்திபெலே பகுதியில் பெங்களூரு ஊரக காவல் துறையினரை குவித்தது. தமிழகத்தில் இருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளிடம் இரண்டு ஆப்ஷன்கள் மட்டும் காவல்துறை முன்வைத்தது.
அதில் ஒன்று.. நீங்கள் பெங்களூருவிலுள்ள, வீடுகளுக்கு செல்ல முடியாது. ஹோட்டல் ரூம் அல்லது கல்யாண மண்டபம் போன்ற, அரசு ஏற்பாடு செய்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு செல்ல வேண்டும். 14 நாட்கள் அங்குதான் கழிக்க வேண்டும். அதற்கான செலவையும் நீங்கள் ஏற்கவேண்டும். சம்மதம் என்றால் உள்ளே வாருங்கள் என்பது ஒரு ஆப்ஷன்.
இதற்கு சம்மதம் இல்லை என்றால், அப்படியே நீங்கள் வந்த ஊரை பார்த்து திரும்பி செல்லுங்கள் என்பது அடுத்த ஆப்ஷன். புதுச்சேரி வாகனங்களுக்கு இந்த கெடுபிடி இல்லாத நிலையில், தமிழக வாகனங்களுக்கு மட்டும் தான் இப்படியான நிலைமை.

கஷ்டப்படும் மக்கள்
கைக்குழந்தை, முதியவர்களுடன், பல்வேறு முக்கியமான விஷயங்களுக்காக, வாகனங்களில் பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்து கர்நாடக எல்லை வந்த பிறகு, திடீரென இவ்வாறு கூறி திருப்பி அனுப்புகிறது அந்த மாநில போலீஸ். எவ்வளவு மன உளைச்சல்.. எவ்வளவு பொருட் செலவு.. எவ்வளவு முக்கியமான விஷயங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது என்பதை அந்த அரசு கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு அளவு கடந்து சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான் கர்நாடக அரசு எடுத்த இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்கிறது, முதல்வர் அலுவலக வட்டாரம். அதிலும், இப்போது புது சிக்கல் உருவாகியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

சொந்த ஊர்கள் திரும்பும் மக்கள்
தற்போது தமிழகத்தில் இருந்து வருவோரில் 90% பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு செல்ல விரும்பாமல் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்கிறார்கள். 10 சதவீதம் பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு செல்ல சம்மதிக்கிறார்கள். இதற்கு செலவு அதிகம் என்பதோடு, எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்ற ஐயப்பாடு காரணமாக, அவர்கள் திரும்பும் முடிவை எடுக்கிறார்கள்.

தமிழக முதல்வர் தலையிடுவாரா?
ஆனால் இனிமேல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடவசதி இருந்தால், அங்கு செல்ல விரும்பினால் கூட, கர்நாடகாவிற்குள் செல்ல முடியும். அல்லது திருப்பியனுப்பப்படுவார்கள் என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொடர்பு கொண்டு பேச வேண்டும், அல்லது கடிதம் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொபைல் ஆப்
தமிழகத்திலிருந்து வருவோர், வீடுகளில் தங்களை தாங்களே, தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றி வந்தால் என்ன செய்வது என்பதுதான் கர்நாடக அரசு கூறும் காரணம். எனவேதான் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்புவதாக விளக்கம் அளிக்கிறது. ஆனால் ஆரோக்கிய சேது போன்ற செல்போன் ஆப்களை டவுன்லோட் செய்ய கட்டாயப்படுத்தி, அதற்கு சம்மதிப்பவர்களையாவது, கர்நாடக மாநிலத்திற்குள் விடலாம். இதனால் தனிமைப்படுத்த மையங்களுக்கு செலவிட வேண்டிய பெரும் பொருட்செலவு மிச்சப்படும். மன உளைச்சல் இருக்காது. வீடுகளில் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
ஒரு பக்கம் வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்பதில் கவனம் செலுத்தும் அதேநேரம், அண்டை மாநிலங்களே, தமிழர்களை விரட்டியடிப்பது நியாயமில்லை என்பதால், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications