அட இங்க பாருங்க.. பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் மலர்ந்த காதல்.. திருமணத்தில் கரம்பிடித்த ஜோடி!
பெங்களூர்: பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் சந்தித்து கொண்ட ஜோடி 3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதும் பெங்களூர் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக பெங்களூரில் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே தான் செல்கின்றன.
இதனால் தான் அவ்வப்போது பெங்களூர் போக்குவரத்து நெரிசல் என்பது ட்விட்டரில் டிரெண்ட் ஆகும். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் குண்டும்-குழியுமான சாலையாலும் பெங்களூர் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலால் காதல் திருமணம்
இந்நிலையில் தான் கொஞ்சம் வித்தியாசமாக பெங்களூர் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு ஜோடிக்கு காதல் கைக்கூடிய விஷயம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதெப்படிங்க, போக்குவரத்து நெரிசலில் காதல் ஏற்படும்? எனக்கேட்டு நீங்கள் வியந்தால் உங்களுக்கான அடுத்த அதிர்ச்சி இதுதான். அதாவது போக்குவரத்து நெரிசலால் காதல் துளிர்த்த அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர்

ஈஜிபுரா மேம்பால பணி
ஷாக்காக இருக்கிறதா. வாங்க இந்த ஜோடி யார்? காதல் திருமணம் செய்த இந்த ஜோடிக்கு பெங்களூர் போக்குவரத்து நெரிசல் எப்படி உதவியது? என்பது பற்றிய விபரத்தை காதல் திருமணம் செய்த நபரே தனது ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‛‛நான் எனது மனைவியை யாரென்று தெரிவதற்கு முன்பு பெங்களூர் சோனி வேல்ட் சிக்னல் அருகே சந்தித்தேன். அதன்பிறகு ஈஜிபுரா மேம்பாலம் கட்டும் பணியின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காதல் மலர்ந்த தருணம்
அப்போது அவளும், நானும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினோம். நண்பர்களாக இருந்த எங்கள் இருவருக்கும் பசி எடுத்தது. இதையடுத்து வேறு வழியை தேர்வு செய்து இரவு நேரத்தில் பயணித்தோம். ஓட்டலில் சாப்பிட சென்றாம். வீட்டுக்கும் அழைத்து சென்றேன். அன்று முதல் எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 3 ஆண்டு காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் ஈஜிபுராவில் கட்டப்பட்டு வரும் 2.5 கிலோமீட்டர் தொலைவிலான மேம்பால பணிகள் மட்டும் இன்னும் முடியவில்லை'' என கூறியுள்ளார்.

வாழ்த்து தெரிவித்த நெட்டிசன்கள்
இந்த பதிவை தற்போது 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த காதல் கதை பற்றி பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் தாங்கள் சந்தித்த துன்பங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் ஈஜிபுரா மேம்பாலம் கட்டி முடிக்கப்படாததை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறும்படம் வெற்றி
முன்னதாக இதற்கு முன்பு பெங்களூர் சில்க்போர்ட் ஜங்ஷன் போக்குவரத்து நெருக்கடியை மையமாக வைத்து "சில்க் போர்டு, ய டிராபிக் லவ் ஸ்டோரி" என்ற பெயரில் காதல் குறும்படங்கள் வந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தான் தற்போது இந்த காதல் கதையும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது












Click it and Unblock the Notifications