மத உரசல்களுக்கிடையே.. பெங்களூருக்கு அமித் ஷா திடீர் விசிட்! உன்னிப்பாக பார்க்கும் எதிர்க்கட்சிகள்
பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் பயணமாக இன்று கர்நாடகா வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் பாஜக இளைஞரணி பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டு 4ம் தேதியான நாளை கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா பெங்களூரு வருகிறார்.
இந்த பயணத்தில் அம்மாநில பாஜக தலைவர்களுடன் எந்தவித அதிகாரப்பூர்வ சந்திப்பும் இல்லையென்றாலும், நிகழ்ச்சியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அமித்ஷாவுடன் பங்கேற்கின்றார்.

படுகொலை
சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவில் தட்சிண கன்னடம் மாவட்டத்தின் பெல்லாரே கிராமத்தில் பிரவீன் நெட்டாறு எனும் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இவர் பாஜகவின் வாலிபர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சங்கத்தின் பிரமுகராவார். கோழிக்கடையை நடத்தி வரும் இவர், சம்பவத்தன்று இரவு தனது கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் பிரவீன் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டார்.

கண்டனம்
இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டார்கள் என்றும் அவர்கள் கேரளா பதிவு எண் கொண்ட பைக்குகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிசிடிவி மூலம் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதேபோல இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு பின்னால் இருப்பவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.

இஸ்லாமியர்கள் படுகொலை
ஆனால் இது இத்துடன் நிற்கவில்லை. இந்த படுகொலையை தொடர்ந்து கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பந்த் அந்த பகுதியில் பெரும் கலவரமாக மாறியது. சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தியது. இந்த படுகொலையை அடுத்து 2 இஸ்லாமிய இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பை மேலும் அதிகமாக்கியது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய சம்பவங்கள் அரசியல் களத்தை மேலும் கவனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த பின்னணியில் அமித்ஷாவின் வருகை மாநில அரசியல் நிலைமையின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கொண்டாட்டம் தவிர்ப்பு
இன்று பெங்களூரு வரும் அமித்ஷா நாளை சிறப்பு மாநாட்டில் பங்கேற்பார் என முதலமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த படுகொலை சம்பவங்கள் கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்றது. ஆனால் அடுத்த சில நாளான 28ம் தேதி பாஜகவின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட வேண்டிய இடத்தில் இருந்தது. ஆனால் இந்த படுகொலையால் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த படுகொலை தொடர்பாக அம்மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே சமீபத்தில்தான் அமித்ஷாவை சந்தித்திருந்தார்.

என்ஐஏ
இந்த படுகொலை வழக்கை என்ஐஏ கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சந்திப்பின்போது ஷோபா வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஏனெனில் இது ஆளும் பாஜகவிற்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களே கட்சியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினர். இது கடும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்துவது அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் விசாரணையை ஒப்படைப்பது குறித்து அமித்ஷாவின் வருகையையொட்டி முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசவராஜ் பொம்மை
ஆனால், மற்றொருபுறம் கட்சியின் மாநில தலைவர் நளின் குமார் கட்டீலின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான அரசியல் நடவடிக்கையில் மாற்றங்கள் எனில் அது தொலைப்பேசி வாயிலாகவே மேற்கொள்ளப்படலாம் இவ்வாறு நேரில் வருவதற்கான அவசியம் இல்லையென பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அமித்ஷா வருகையின் நோக்கம் மர்மமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாகவே முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லியில் கட்சி மேலிடத்தை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கு அனுமதி கோரியிருந்தார். ஆனால், அனுமதியை அவரால் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications