மாட்டிறைச்சி.. மின்கம்பத்தில் கட்டிவைத்து அசாம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. பரபர கர்நாடகா.. ஷாக்
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி அசாம் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை பஜ்ரங்தள அமைப்பினர் சுற்றிவளைத்தனர். மேலும் அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இறைச்சி கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவம் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது ஆங்காங்கே வெடித்து வருகிறது. பாஜக ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் பசுவதை தடுப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பசு உள்ளிட்டட மாடுகளை வதைப்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.
இப்படி சட்டங்கள் இருந்தாலும் கூட மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளுக்கு மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. சில இடங்களில் மாட்டிறைச்சி விவகாரங்களில் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் திடீரென்று நடந்து விடுகின்றனர்.

மாட்டிறைச்சி சந்தேகம்
இந்நிலையில் தான் தற்போது மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சனையில் தாக்குதல் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் மூடிகொர பகுதியில் இன்று மதியம் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். அவர் மாட்டிறைச்சி கடத்தி செல்வதாக சந்தேகம் தெரிவித்த அவர்கள் அந்த நபரை மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.

கட்டிவைத்து தாக்குதல்
மேலும் கட்டிவைக்கப்பட்ட அந்த நபரை பஜ்ரங்தள அமைப்பினர் சரமாரியாக தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அந்த நபர் அலறி துடித்தார். இருப்பினும் பஜ்ரங்தளத்தை சேர்ந்தவர்கள் அவரை விடவில்லை. தொடர்ந்து அவரை தாக்கினர். இதற்கிடையே சம்பவம் குறித்து அந்தபகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டனர். விசாரணையில் அவர் அசாமை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

3 பேர் மீது வழக்குப்பதிவு
மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் செய்தார். அதன்படி பஜ்ரங்தளத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அடிவாங்கிய நபர் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும் அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி தடயஅறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மூடிகெரேயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம்
கர்நாடகாவில் கடந்த 2021 ஜனவரி முதல் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. இதனால் பசு, காளை, எருதுகளை வெட்டுவதும், வர்த்தகம் செய்வது சட்டத்துக்கு எதிரானதாகும். இருப்பினும் கூட இந்த சட்டம் என்பது பிற மாநிலங்களில் இருந்து மாட்டிறைச்சி கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவில்லை. இதனால் தற்போதும் கூட கர்நாடகாவில் மாட்டிறைச்சி கிடைத்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது மூடிகெரேவில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி அசாமை சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications