ஆடைகளை கழற்றி காவலரை கடித்த பாஜக பெண் நிர்வாகி! கைது செய்ய போன இடத்தில் களேபரம்! பெங்களூரில் பரபர
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பெண் பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்யச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் திடீரென ஆடைகளைக் கலைந்து ரகளை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.. இருப்பினும், போலீசாரே ஆடைகளைக் கலைந்து தாக்கியதாக பாஜக குற்றஞ்சாட்டுகிறது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியை சேர்ந்த பாஜக நிர்வாகி சுஜாதா ஹண்டி மற்றும் ஹூப்பள்ளி-தார்வாட் காங்கிரசு கவுன்சிலர் சுவர்ணா கல்லக்குண்டலா ஆகியோர் இடையே எஸ்ஐஆர் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் சீக்கிரம் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற உள்ள நிலையில், பாஜக நிர்வாகி சுஜாதா வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்து வந்துள்ளார்.

கர்நாடகா
இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கவுன்சிலர் சுவர்ணா போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சுஜாதா பொய்யான காரணங்களைச் சொல்லி வாக்காளர்களை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சுவர்ணா கல்லக்குண்டலா குற்றம்சாட்டினார். இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே முன்னரே மோதல்கள் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆடைகளைக் கலைந்து தாக்குதல்?
காங்கிரஸ் கவுன்சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் சுஜாதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். சுஜாதா கைது செய்து வேனில் ஏற்றிய போது திடீரென அங்குக் களேபரம் ஏற்பட்டது. சுஜாதா ஆடைகளைக் கலைந்து போலீசார் தாக்கியதாகச் சொல்லி வீடியோ ஒன்றும் பரவியது. அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாஜக
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய பாஜக எம்எல்ஏ மகேஷ் தெங்கினகாயி, இதை மனிதாபிமானம் இல்லாத செயல் என்றும், பெண் சமூகத்திற்கே இதனால் அவமானம் என்றும் வன்மையாகக் கண்டித்தார். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் இவர்கள் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என எச்சரித்தார். சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி வீட்டில் நுழைந்து காங்கிரஸ் கவுன்சிலர் ரகளை செய்ததாகவும் சாடிய மகேஷ், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்தும் கேள்வி எழுப்பினார்.
போலீஸ் விளக்கம்
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஹுப்பள்ளி போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தப் பெண் அவராகவே தனது ஆடைகளைக் கலைந்து போலீசாரை தாக்க ஆரம்பித்ததாக நகரக் காவல் ஆணையர் சசி குமார் தெரிவித்தார். கணக்கெடுப்பு தொடர்பாக ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை கைது செய்யச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "ஜனவரி 5ஆம் தேதி அவர் மீது ஒருவர் கொலை முயற்சி புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப் போனோம். அப்போது அந்தப் பெண்ணும், உடன் இருந்தவர்கள் தகராறு செய்தனர். உதவி ஆய்வாளர் ஒருவரை கடித்த அந்தப் பெண், 4 காவலர்களைத் தாக்கினார். காவலர்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தார்.
பெண் தான் தாக்கினார்
ஒரு வழியாக அவரை சமாளித்து வேனுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது திடீரென அவரே தனது ஆடைகளைக் கழற்றிக் கூச்சலிட ஆரம்பித்தார். அங்கிருந்த அனைவரும் இதைப் பார்த்தனர். பிறகு அங்கிருந்த பெண் காவலர்கள் தான் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆடைகளை அணிய வைத்தனர். அவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே கைது செய்தோம். அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகப் பரவும் செய்தி முற்றிலும் தவறானது" என்றார்.


Click it and Unblock the Notifications
