காசைப் பிடிங்க.. குழந்தையைத் தூக்கி கொண்டு பறந்த கும்பல்! பணக் கட்டோடு கதறும் தாய்! பரபர காரைக்குடி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தையை தாயிடம் மூன்று லட்சம் ரூபாயை கொடுத்து வலுக்கட்டாயமாக மூன்று பெண்கள் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தியது போல் தெரியக் கூடாது என்பதற்காக மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வீசி எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நா.புதூர் வெங்கடாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரது மனைவி லட்சுமி சித்தாள் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21 அன்று காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் லட்சுமிக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. லட்சுமி மருத்துவமனையில் இருந்துள்ளார்.

பெண் குழந்தை
அப்போது, அருகில் தன் மகளின் பிரசவத்திற்காக வந்திருந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லட்சுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். உனக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. நான்காவதையும் வளர்ப்பது கஷ்டம். நான் ஒரு ஆள் சொல்கிறேன், அவர்களிடம் குழந்தையைக் கொடுத்துவிடு என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். லட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்து என் குழந்தையை நானே வளர்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
குழந்தை கடத்தல்
மேலும் லட்சுமியின் மூத்த மகளை ஏமாற்றி அவர்களின் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லட்சுமி குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் முகவரியை வைத்துக் கொண்டு நேற்று இரவு 7 மணியளவில் லட்சுமியின் வீட்டிற்குள் திடீரென ஒரு கும்பல் நுழைந்தது. மூன்று பேர், லட்சுமியையும் அவரது மூத்த மகளையும் மிரட்டும் தொனியில் வற்புறுத்தியுள்ளனர்.
ரூ.3 லட்சம்
பின்னர், லட்சுமியின் கையில் ரூ.3 லட்சம் பணத்தை வலுக்கட்டாயமாகத் திணித்து விட்டு, தொட்டிலில் இருந்த 45 நாள் ஆன பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பி மறைந்தனர். தாய் லட்சுமி, இன்று காலை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் காரைக்குடி ஏ.எஸ்.பி ஆசிஷ் புனியாவை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
காவல்துறை
என்னை ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி என் குழந்தையைப் பறித்துச் சென்றுவிட்டனர். அவர்கள் கொடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் பணம் எனக்கு வேண்டாம்" என்று கூறி, அந்தப் பணத்தை அப்படியே காவல்துறையிடம் ஒப்படைத்தார். மேலும், தன் குழந்தையை அந்த கும்பலிடமிருந்து மீட்டுத் தருமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறை விசாரணை
பெற்ற தாயை மிரட்டி, பணத்தைக் கொடுத்துக் குழந்தையைத் தூக்கிச் சென்ற இந்தச் சம்பவம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குழந்தையைத் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தாய் முன்னிலையில் குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாக எழுந்த புகார் காரைக்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.














Click it and Unblock the Notifications