ஜெயலலிதா-11,000 சேலை, 750 காலணிகள் ஏல வழக்கு-தமிழக லஞ்ச ஒழிப்புதுறைக்கு பெங்களூர் கோர்ட் இறுதி கெடு!
பெங்களூர்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக் கோரிய வழக்கில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய 40 நாட்கள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது பெங்களூர் நீதிமன்றம்.
தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டது. முதலில் தமிழ்நாட்டிலும் பின்னர் கர்நாடகாவிலும் இந்த வழக்கு நடைபெற்றது.

4 ஆண்டு சிறை தீர்ப்பு: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பெங்களூர் உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா காலமானதால் அவரது பெயரை தீர்ப்பில் இருந்து விடுவித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கான 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதன்படி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை மூவரும் அனுபவித்தனர்.
ஜெயலலிதா சொத்துகள் ஏலம்: இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா தொடர்புடைய பொருட்களை-11,344 சேலைகள், 91 ஆடம்பர கை கடிகாரங்கள், 750 காலணிகள் உள்ளிட்டவற்றை
ஏலம் விடக் கோரி சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி மோகன் விசாரித்தார். இவ்வழக்கில் நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற பெங்களூர் நீதிமன்ற, ஜெயலலிதா சொத்து விவரங்கள் குறித்த விரிவான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யும் உத்தரவிட்டது.
40 நாட்கள் அவகாசம்: இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி மோகன் முன்பு நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் டிஎஸ்பி புகழ்வேந்தன் ஆஜரானார். மேலும், ஜெயலலிதா சொத்து விவரங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய 40 நாட்கள் அவகாசமும் கோரினார். இதனை ஏற்ற நீதிபதி மோகன், 40 நாட்கள் என்பது இறுதி அவகாசம். அதற்குள் ஜெயலலிதா சொத்து தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications