பெங்களூரில் பெண் என்ஜினியரிடம் ரூ 84 லட்சம் மோசடி! ஆன்லைனில் கைவரிசை
பெங்களூர்: பெங்களூரில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினியரை மோசடி கும்பல் ரூ 84 லட்சத்தை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஒயிட்ஃபீல்டு பகுதியில் 25 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக உள்ளார். இளம்பெண்ணின் வாட்ஸ்ஆப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி என கூறிக் கொண்டு ஒருவர் பேசினாராம்.

அப்போது அவர் "உங்களது வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. அது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்துவார்கள்" என கூறினாராம். இதையடுத்து மும்பை போலீஸார் என கூறிக் கொண்டு வேறொரு நபரும் பேசியுள்ளார்.
அப்போது அந்த நபரும், நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளன. உங்களை கைது செய்வோம் என மிரட்டினாராம். இதை கேட்டதும் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தாராம்.
கைது செய்வோம்
மேலும் இந்த வழக்கில் உங்களை கை செய்யக் கூடாது என்றால் நான் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி அந்த நபர் இளம்பெண்ணை மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த அந்த பெண், அந்த நபர் சொன்ன வங்கி கணக்குகளுக்கு ரூ 84.5 லட்சத்தை அனுப்பி வைத்தாராம்.
பணம் வாங்கியும் மிரட்டல்
இவ்வளவு பணம் வாங்கியும் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே மர்மநபர்கள்தான் நம்மை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பதை உணர்ந்தாராம்.
ஒயிட்பீல்டு
இதையடுத்து ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீஸில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
இதே போல் கடந்த ஆண்டு பெங்களூரில் டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயது சாப்ட்வேர் என்ஜினியர் ரூ 11.8 கோடியை இழந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரூ 11 கோடி
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என கூறிக் கொண்டு ஒருவரிடம் இருந்து சாப்ட்வேர் என்ஜினியருக்கு போனில் அழைப்பு வந்தது. அப்போது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்கள் சிம் கார்டு சட்ட விரோத விளம்பரங்கள் மற்றும் துன்புறுத்தல் செய்திகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறி அந்த கும்பல் மிரட்டியது.
டிஜிட்டல் கைது
மும்பையின் கொலாபா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டினராம். இதையடுத்து டிஜிட்டல் கைது செய்வதாகவும் கூறினர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நேரில் வந்து கைது செய்து சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தினராம்.
யாரிடமும் சொல்லக் கூடாது
இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்குமாறு மிரட்டினராம். ஸ்கைப் செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்லி பேசினாராம். வீடியோ காலில் பேசிய நபர் போலீஸ் சீரூடையில் இருந்தார். அவர் சாப்ட்வேர் என்ஜினியரிடம் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. வழக்கு கோர்ட்டில் உள்ளது.
போலீஸ் விசாரணை
எனவே நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் குடும்பத்துடன் கைது செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டினாராம். இதனால் பதறிய சாப்ட்வேர் என்ஜினியர் ரூ.11.8 கோடியை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணையில்தான் அவர்கள் மோசடி கும்பல் என்றும் பணம் கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது.


Click it and Unblock the Notifications
