கன்னடர் மீது அபாண்ட பழி.. பெங்களூர் விமானப்படை அதிகாரி தலைமறைவு! டேஷ் கேமரா பதிவை வழங்க மறுப்பு
பெங்களூர்: பெங்களூரில் விமானப்படை அதிகாரியிடம் பைக்கில் வந்த கால்சென்டர் ஊழியர் கன்னடத்தில் பேசி திட்டி தாக்கியதாக கூறப்படும் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கால்சென்டர் ஊழியர் கொடுத்த புகாரில் விமானப்படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதியப்பட்ட நிலையில் காரின் டேஷ்கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் வழங்காமல் அந்த அதிகாரி தலைமறைவாகி உள்ளார். இதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் சிவி ராமன் நகரில் உள்ள டிஆர்டிஓ பேஸ் 1 டவுன்ஷிப்பில் வசித்து வருபவர் ஷில்லாதித்யா போஸ். இவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் மதுமிதா. இவரும் விமானப்படையில் தான் பணியாற்றி வருகிறார். மதுமிதா Squadron Leader ஆக செயல்பட்டு வருகிறார்.

நேற்று காலையில் இருவரும் காரில் வீட்டில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்தவருக்கும், காரில் சென்ற ஷில்லாதித்யா போஸ்க்கும் பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
மேகாரில் ரத்தம் சொட்ட சொட்ட ஷில்லாதித்ய போஸ் அமர்ந்து வீடியோ வெளியிட்டார். அதில், பைக்கில் வந்தவர் டிஆர்டிஓவை சேர்ந்தவர்களா நீங்கள் என்று தாக்கினார். நெற்றியில் சாவியை வைத்து தாக்கினார். ரத்தம் கொட்டியது. உதவிக்கு யாரும் வரவில்லை. விமானப்படை கமாண்டராக நான் மக்களை காக்கும் நிலையில் யாரும் என்னை பாதுகாக்கவில்லை. பைக்கில் வந்தவருக்கு ஆதரவாக என்னை திட்டினர்'' என்று கூறினார்.
மேலும் ஷில்லாதித்யா போஸின் மனைவி மதுமிதா கொடுத்த புகாரில் பையப்பன ஹள்ளி போலீசில் புகாரளித்தார். அதில் பைக்கில் வந்தவர் காரில் மோதி தகராறில் ஈடுபட்டதாக தெரிவித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி விகாஷ் குமார் என்ற கால்சென்டர் ஊழியரை கைது செய்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பாதிவான வீடியோ வெளியானது. அதில் விமானப்படை அதிகாரி ஷில்லாதித்ய போஸ் தான் அவரை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையானது.
மேலும் கைதான விகாஷ் குமார், விமானப்படை அதிகாரி மீது போலீசில் புகார் செய்தார். அதில், ‛‛விமானப்படை அதிகாரியின் கார் தான் தனது பைக்கில் முதலில் மோதியது. இதை கேள்வி கேட்டபோது அவர் காரில் இருந்து இறங்கி என்னை கீழே தள்ளி தாக்கினார். பைக்கையும் கீழே தள்ளினார். கழுத்தை பிடித்து நெரித்து கொல்ல முயன்றார்'' என்று கூறியிருந்தார். சிசிடிவி காட்சிகளும் அதனை உறுதி செய்தன. இதையடுத்து விமானப்படை அதிகாரி ஷில்லாதித்ய போஸ் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 109 (கொலை முயற்சி), 115 (2) (வேண்டும் என்றே ஒருவரை காயப்படுத்துதல்), 30 (பறித்தல்), 324 (விபத்து ஏற்படுத்துதல்), 352 (உள்நோக்கத்துடன் அமைதியை சீர்க்குலைக்க முறயற்சித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஷில்லாதித்ய போஸிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவானார். அவர் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் சார்பில், ‛‛விமானப்படை அதிகாரியும், அவரது மனைவியும் காரின் டேஷ்கேமராவில் உள்ள பதிவை தர மறுக்கின்றனர். விமானப்படையின் அதிகாரியின் மனைவி மதுமிதா, டிவைஸ் லாக் செய்யப்பட்டுள்ளது.
பாஸ்வேர்ட் கணவருக்கு தான் தெரியும். அவர் இப்போது கொல்கத்தாவில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். விமானப்படை அதிகாரி வெளியிட்ட வீடியோவில் டேஷ் கேமராவில் நடந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் இப்போது அவர்கள் அதனை வழங்க மறுக்கின்றனர். விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்'' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வர் கூறுகையில், ‛‛இந்திய விமானப்படை அதிகாரி ஷில்லாதித்ய போஸ் தலைமறைவாகி உள்ளார். அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். பைக்கில் வந்தவர்கள் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications