நாளை முதல் பெங்களூர் மெட்ரோ கட்டணம் 50% வரை உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்! குறைந்தபட்ச ரேட் எவ்வளவு?
பெங்களூர்: பெங்களூரில் டிராபிக்கை சமாளிக்க மெட்ரோ எந்தளவுக்கு கை கொடுக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பெங்களூரில் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இப்போது அங்கு மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50% வரை மெட்ரோ டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நாட்டிலேயே டிராபிக் உச்சத்தில் இருக்கும் நகரங்களில் ஒன்றாகப் பெங்களூர் இருக்கிறது.

பெங்களூர் மெட்ரோ:
வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் வெளியே சென்றால் திரும்புவது பெரும் போராட்டமாக இருக்கும். இந்த பிரச்சினை மெட்ரோ சேவை வந்த பிறகே அங்கு ஓரளவுக்குச் சமாளிக்கப்பட்டது. மெட்ரோ ரூட்களில் மக்கள் குறுகிய நேரத்தில் ஏசியில் இருந்தபடியே செல்லும் சூழல் உருவானது. டிராபிக்கில் நிற்கத் தேவையில்லை என்பதால் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே பிஎம்ஆர்சிஎல் எனப்படும் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் என்பதால் கட்டண உயர்வு சில மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை பிப்ரவரி 9ம் தேதி முதலே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
50% வரை உயர்வு:
குறைந்தபட்ச விலை என்பது ரூ.10ஆக தொடர்கிறது. இரண்டு கிமீ வரை பயணிக்க ரூ.10 செலுத்தினால் போதும். ஆனால், அதற்கு அடுத்தடுத்த தொலைவுக்கான கட்டணம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு அதிகபட்ச கட்டணமாக அங்கு ரூ.60 இருந்த நிலையில், இப்போது அது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அளித்த பரிந்துரை அடிப்படையிலேயே இப்போது கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு உயர்வு:
அதன்படி 0-2 கிமீ வரை ரூ.10, 2-4 கிமீ வரை ரூ 20, 4-6 கிமீ வரை ரூ 30, 6-8 கிமீ வரை ரூ 40, 8-10 கிமீ வரை ரூ 50, 10-15 கிமீ வரை ரூ 60, 15-20 கிமீ வரை ரூ 70, 20-25 கிமீ வரை ரூ 80, 25-30 கிமீ வரை ரூ 90, 30 கிமீக்கு மேல்: ரூ 90 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை:
அதேநேரம் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நெரிசல் இல்லாத நேரங்களில் (Off-peak) ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்கும் போது 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது இப்போது 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இந்த சலுகை கிடைக்கும். வார இறுதி நாட்களில் இரவு 9 மணி முதல் கடைசி ரயில் வரை சலுகை கிடைக்கும்.
மேலும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நாள் முழுக்க சலுகை கிடைக்கும். இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தக் குறைந்தபட்சம் 90 ரூபாய் அதில் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications