பெங்களூரில் செல்லத்தை தூக்கிட்டாங்க.. வண்டியின் மதிப்பு 80 ஆயிரம் தான்.. அபராத பாக்கி ரூ.1.61 லட்சம்
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். அப்படி விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதை நிரூபிக்கும் விதமாக 311 போக்குவரத்து விதிமீறல்களால் ரூ.1.61 லட்சம் அபராதம் பாக்கி வைத்திருந்த வாகன ஓட்டி ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தார். இதுபற்றி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, பெங்களூர் போலீசார் அந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
இந்தியாவின் ஐடி தலைநகர் என்று போற்றப்படும் பெங்களூரில் உள்ள டிராபிக் உலக அளவில் பேமஸ் ஆனது. அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.. என்ன தான் அங்கு தற்போது மெட்ரோ ரயில்கள் ஓடினாலும், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உள்ளது போல் புறநகர் மின்சார ரயில்கள் இல்லை.. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க இது முக்கிய காரணமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை போல், போக்குவரத்து விதிமீறல்கள் பெங்களூரில் அதிகமாக உள்ளது.

இப்படி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். பொதுவாக மது அருந்தி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வாகனம் ஒப்படைக்கப்படுவது உண்டு. மற்றவர்களுக்கு அபராதம் ஆன்லைனில் கட்ட சொல்வதும் நடக்கிறது. ஆனால் இப்படி கட்டச் சொல்லும் அபராதங்களை வாகன ஓட்டிகள் கட்டுவது இல்லை. இந்த அபராதங்களை வசூலிக்கவும் பெங்களூர் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் கே.ஏ. 05 ஜே.எக்ஸ் 1344 என்ற பதிவெண் கொண்ட ஸ்கூட்டர் ஓட்டி 311 முறை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு போலீசார் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 500 அபராதம் விதித்து இருந்தார்கள்.
கடந்த 2023-ம் ஆண்டு முதலே அந்த வாகன ஓட்டி தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வந்திருந்தார். போலீசார் அவருக்கு அவ்வப்போது அபராதம் விதித்து வந்த போதிலும், அவரிடம் அபராதத்தை வசூலிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்தனர். அந்த வாகன ஓட்டியும் அபராதத்தை செலுத்தாமல் ஸ்கூட்டரை ஓட்டி வந்திருந்தார்.
இதுபற்றிய தகவல் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் போலீசாரின் அலட்சியமே காரணம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அபராதத்தை வசூலிக்க வேண்டும் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதிரடியாக களம் இறங்கிய பெங்களூர் போக்குவரத்து போலீசார் வாகன பதிவெண் மூலம் ரூ.1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நபரின் வாகனம் யாருடையது என்று தேடினார்கள். அந்த வாகனம் பெங்களூர் கலாசிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் 311 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதும், இதுவரை அவர் அபராதத் தொகையை செலுத்தாமல் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து பெரியசாமியை பெங்களூர் போக்குவரத்து போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். அத்துடன் அவரது ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் உடனே ரூ.1.61 லட்சம் அபராதத் தொகையை செலுத்த கோரி அவருக்கு நோட்டீசும் வழங்கினார்கள். இந்த அபராதத் தொகையை பெரியசாமி, நீதிமன்றத்தில் செலுத்தி ஸ்கூட்டரை எடுத்துக் கொள்ளலாம் என போலீசார் அறிவித்தனர். ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால், அவரது ஸ்கூட்டரை விற்றால் ரூ.80 ஆயிரத்துக்கு தான் விலைக்கு போகுமாம். ஆனால் அவர் அபராதமாக ரூ.1.61 லட்சம் கட்ட வேண்டியதுள்ளது. இது அவரது ஸ்கூட்டரை விட இரு மடங்கு பணம் என்பதால் நிச்சயம் அவர் அபராதத்தை கட்டி வாகனத்தை மீட்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications