‛கவனம் ஈர்த்த பெங்களூர்’.. தண்ணீர் தட்டுப்பாட்டில் பாடம் கற்ற மக்கள்.. இப்போ செய்றதை பாருங்க.. செம
பெங்களூர்: பெங்களூர் நகரில் தலைவிரித்தாடிய தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பாடம் கற்றுள்ளனர். தற்போது அங்கு கோடை மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் அவர்கள் கையில் எடுத்துள்ள நடவடிக்கை என்பது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் கோடை துவங்குவதற்கு முன்பே பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் என்பது மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. பெங்களூரின் புறநகர் பகுதிகளில் 30 சதவீத போர்வெல்கள் தண்ணீரின்றி வறண்டுப்போனது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் டேங்கர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
அதோடு பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல் பிடபிள்யூஎஸ்எஸ்பி எனும் பெங்களூர் மாநகர குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வினியோகம் செய்யப்படும் காவிரி நீரை குடிநீருக்கு பதில் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூரில் தற்போது வெயில் குறைந்து கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வரும் நாட்களிலும் கோடை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2 மாதங்களில் சந்தித்த தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பொதுமக்கள் பாடம் கற்றுள்ளனர். இதனால் அவர்கள் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை தங்கள் வீடுகளில் அமைக்க தொடங்கி உள்ளனர். ஏராளமானவர்கள் தங்களின் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் பூமிக்கடியில் மழைநீரை சேகரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதுபற்றி வீடுகளில் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை செய்து கொடுக்கும் ரகுபதி கூறுகையில், ‛‛எனது தலைமையிலான குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 150 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பணியை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து பணிகள் அதிகமாக வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளான உறிஞ்சி குழிகள், கிணறுகள் உள்ளிட்டவற்றை உருவாக்கி தரும்படி 400 போன்கால்கள் வந்துள்ளன. பெங்களூர் புறநகரில் பகுதிகளில் இருந்து அதிகமானவர்கள் போன் செய்கின்றனர் '' என்றார்.
அதேபோல் கல்பனா என்பவர் கூறுகையில், ‛‛பெங்களூர் மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். ஏனென்றால் 1,000 சதுரஅடிக்கு குறைவான அளவிலான வீடுகளில் வசிப்போர் கூட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என விசாரிக்கின்றனர். மேலும் தனியார் என்ஜிஓக்களும் மழைநீர் சேகரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதன்படி நகரில் பயன்படுத்தாமல் விடப்பட்ட கிணறுகளை புனரமைத்து மழைநீர் சேகரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான செயல்முறையில் பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் 1,000 உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத 39 ஆயிரம் குடும்பங்களுக்க அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபற்றி பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ‛‛மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டாயம் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம்பெற செய்ய வேண்டும். இதுதொடர்பான புதிய அறிவிப்பு குறித்த நோட்டீஸ் மீண்டும் பிறப்பிக்கப்பட உள்ளது'' என்றார்.
மேலும் பெங்களூர் நகரில் 74 மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு (Community Rainwater Harvesing Proposals) விரைவில் ஒப்புதல் கொடுக்கும் திட்டமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது












Click it and Unblock the Notifications