இத்தனை ஆக்கிரமிப்புகளா! பெங்களூர் வெள்ளத்திற்கே காரணமே இதுதான்.. சிக்கும் விப்ரோ, பிரெஸ்டீஜ்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பெங்களூர் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
மேலும் இந்த ஆக்கிரமிப்பு பட்டியலில் பிரபல விப்ரோ, பிரெஸ்டீஜ் உள்ளிட்ட நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெள்ளம்
இயற்கையில் மழைநீர் வடிகால்களை கொண்டுள்ளதாக சொல்லப்படும் பெங்களூர் நகரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ளத்திற்கு காரணம் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்புகள்தான் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. இது ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பெங்களூர் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த நடவடிக்கையில் சாமானிய மக்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டினுள் இருந்த நேரத்தில் அவர்களுக்கு சொல்லாமல் அந்த வீட்டின் சுற்று சுவர் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில், "எங்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. இந்த வீடு கட்டுவதற்கு அனைத்து அனுமதிகளையும் பெற்றிருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பிரமுகரின் ஆக்கிரமிப்பு
ஆனால் அதிகாரிகள் இந்த கட்டுமானத்திற்கு எவ்வித அனுமதியும் கொடுக்கப்படவில்லை. இது மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பு என்று கூறியுள்ளார். இதேபோல பல வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளன. ஆனால் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதன் தொடர்ச்சியாக பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ள நலபாட் அகாடமி ஆஃப் இன்டர்நேஷனல் பள்ளியின் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழுப்பல்
இந்த பள்ளி காங்கிரஸ் இளைஞரணி தலைவர் முகமது நலபாட் என்பவருக்கு சொந்தமானதாகும். பெங்களூரை வெள்ளம் சூழந்த நேரத்தில் ஆளும் பாஜவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஏற்கெனவே உங்களுக்கு தெரியாதா என ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தலைமைப் பொறியாளர் மாலதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் வருவாய்த் துறையினர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டியலில் பிரபல நிறுவனங்கள்
அதாவது, "இந்த ஆக்கிரமிப்பு குறித்து எங்களுக்கு தெரியாது. இது வருவாய்த் துறையின் கீழ் வருகிறது. அவர்கள் சரிபார்த்திருக்க வேண்டும். தற்போது ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து நாங்கள் இதனை இடித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் இந்த ஆக்கிரமிப்பு பட்டியலில் விப்ரோ, பிரெஸ்டீஜ், ஈகோ ஸ்பேஸ், பாக்மேனே டெக் பார்க், கொலம்பியா ஆசியா மருத்துவமனை மற்றும் திவ்யஸ்ரீ வில்லாஸ் ஆகியவை அடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஒருதலைபட்சமான நடவடிக்கை
அதேபோல இந்த பட்டியலில் உள்ள கட்டிடங்களை இடிப்பது குறித்து பொறியாளர்களிடம் செய்தி ஊடகம் கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்த ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இந்த பணியில் தாமதம் உள்ளது" என்று கூறியுள்ளனர். தூக்கத்தில் இருக்கும்போது குடியிருப்பின் சுற்று சுவர்களை மாநகராட்சி எங்களிடம் சொல்லாமலேயே இடித்து தள்ளி இருப்பதாக குடியிருப்பாளர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications