பெங்களூர் கூட்ட நெரிசல்.. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் சித்தராமையா.. நீதி விசாரணைக்கும் உத்தரவு
பெங்களூர்: பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். துயர சம்பவம் நடந்து இருக்க கூடாது. பெங்களூரில் எதிர்பார்த்த அளவை விட அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர். பெங்களூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதையடுத்து, வெற்றி பெற்ற பெங்களூர் அணியின் வீரர்களுக்கு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதுபோல், இன்று மாலை 5 மணிக்கு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பெங்களூர் மைதானத்தில் கூட்ட நெரிசல்
விதான சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு விராட் கோலி, ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்வதாக கூறப்பட்டது. பின்னர் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக திறந்த பேருந்தில் கிரிக்கெட் வீரர்களை ஊர்வலமாக அழைத்து செல்வது ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் திரண்டு வந்தார்கள். மைதானத்திற்குள் ரசிகர்கள் இலவசமாகவே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்து கொண்டு ரசிகர்கள் செல்ல முயன்றனர்.
11 பேர் உயிரிழப்பு
இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். அதே நேரத்தில் எப்படியும் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று பெங்களூர் அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒரே நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் அங்கு குவிந்ததால் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் அதிகரித்து இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள்
கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த சித்தராமையா தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சின்னசாமி மைதானத்தின் வெளியே மட்டும் சுமார் 3 லட்சம் ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.
விதான் சவுதா முன்பு சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் குவிந்து இருந்தனர். சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். இப்படியொரு சம்பவம் நடந்து இருக்க கூடாது. விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாஜகவினர் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications