41 வயதில் வந்த சபலம்.. ஆசையோடு அழகியின் வீட்டுக்கு போன ஐடி ஊழியருக்கு நேர்ந்த கதி.. உஷார் மக்களே
பெங்களூர்: பெங்களூரில் பிரபலமான ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 41 வயது நிரம்பிய நபருக்கு டேட்டிங் செயலி மூலமாக 36 வயது பெண் பழக்கமானார். அந்த பெண் அழைத்ததால் அவரது வீட்டுக்கு போன ஐடி ஊழியர் பெரிய சிக்கலில் மாட்டி பணத்தை இழந்துள்ளார். 41 வயதில் வந்த சபலத்தால் அவர் எதிர்கொண்ட சிக்கல் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் 41 வயது நிரம்பிய நபர். இவர் பெங்களூரில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மகாதேவபுராவில் உள்ள பிரபலமான ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டேட்டிங் செயலி மூலமாக ஒரு பெண் பழக்கமாகி உள்ளார்.

அந்த பெண்ணுக்கு 36 வயது. அவரது பெயர் டேட்டிங் செயலியில் ‛ராக்கி' என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் எனவும், இப்போது பெங்களூரில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து 2 பேருக்கும் பிடித்துப்போகவே செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர். அப்போது சங்கீதா தனியார் நிறுவனம் ஒன்றில் பிசினஸ் அனலிஸ்ட்டாக இருப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அதேபோல் வீடியோ காலிலும் பேசினர்.
இந்நிலையில் தான் அந்த பெண், ஐடி ஊழியரிடம், நேரில் சந்திக்கலாமா? என்று கேட்டுள்ளார். இதையடுத்து அதற்கு ஐடி ஊழியருக்கும் ஓகே என்று கூறியுள்ளார். கடந்த 18 ம் தேதி இருவரும் எலகங்காவில் உள்ள ஸ்டார்பக்ஸ் டீ ஷாப்பில் சந்தித்துள்ளனர். அவர்கள் 2 பேரும் டீ குடித்தபடி பேசி கொண்டிருக்கின்றனர். இதையடுத்து அந்த பெண் ஐடி ஊழியரை ராமகொண்டனஹள்ளி எனும் இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு உள்ளே கூட்டி சென்றார்.
வீட்டில் அவர்கள் 2 பேர் மட்டுமே இருந்தனர். அப்போது அந்த பெண், மதுபானத்தை ஊற்றி ஐடி ஊழியருக்கு கொடுத்துள்ளார். மது மற்றும் மாது போதையில் ஐடி ஊழியர் இருந்தார். இந்த வேளையில் தான் திபுதிபுவென 4 பேர் கும்பல் அந்த வீட்டுக்குள் நுழைந்தது. அவர்களை பார்த்து ஐடி ஊழிய ஷாக்கானார்.
அவர், நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கவே.. அருகே இருந்த அந்த பெண், இதில் ஒருவர் இந்த வீட்டின் உரிமையாளர் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் இங்கு போதைப்பொருள் பார்ட்டி நடக்கிறது. நீங்களும் போதைப்பொருள் பார்ட்டியில் பங்கேற்க தானே வந்தீர்கள்? என்று கூறினார். அதற்கு ஐடி ஊழியர் இல்லை.. இல்லை.. என்று மறுத்தார்.
இதற்கிடையே தான் அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணின் பேக்கில் இருந்து வெள்ளை நிற பவுடர் பாக்கெட்டை எடுத்ததோடு, இந்த போதைப்பொருள் எப்படி இங்கே வந்தது? என்று கேள்வி கேட்டார். இந்த வேளையில் அந்த பெண் இன்னொரு அறைக்குள் சென்று கதறி அழுதார். என் மானமே போய்விட்டது. நான் இங்கேயே தற்கொலை செய்யப்போகிறேன் என்று கதறினார். இது ஐடி ஊழியரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடக்கிறது? என்று அறியாத ஐடி ஊழியர் பெரிய சிக்கலில் மாட்டி கொண்டதாக நினைத்தார்.
இதனால் அங்கு வந்திருந்தவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்க அவர்கள் ரூ.15 லட்சம் தந்தால் உங்களை விட்டு விடுவோம். இல்லாவிட்டால் போலீசில் சிக்க வைத்து விடுவோம் என்று கூறினர். இதை கேட்டு உறைந்துபோன ஐடி ஊழியர் தன்னிடம் ரூ.15 லட்சம் இல்லை. ரூ.2 லட்சம் தான் இருக்கிறது என்று கூறி அதனை பரிமாற்றம் செய்தார். இதையடுத்து அந்த 4 பேர் கும்பல் அங்கிருந்து செல்லவே ஐடி ஊழியரும் தனது வீட்டுக்கு சென்றார்.
அதன்பிறகு கடந்த 21ம் தேதி நடந்த சம்பவம் பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறினார். அப்போது அவர்கள் போலீசில் புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து ஐடி ஊழியர் சம்பவம் குறித்து எலகங்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது தான் அந்த பெண் திட்டமிட்டு ஐடி ஊழியரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.
அதாவது ஐடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் சங்கீதா (வயது 36), சரணபசப்பா பலிகார் (50), ராஜூ மணி (34), அபிசேக் (19), பீரபல் மஜாகி (21), ஷ்யாம் சுந்தர் பாண்டே (20) என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே கும்பல். இதில் சங்கீதா தான் பெயரை மாற்றி ஐடி ஊழியரிடம் டேட்டிங் செயலி மூலமாக பழகி உள்ளார்.
அதன்பிறகு ஐடி ஊழியரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டுக்கு அழைத்து சென்று மற்றவர்களுடன் சேர்ந்து பணத்தை பறித்தது தெரியவந்தது. அதேபோல் அவர்கள் போதைப்பொருள் என்று கூறியது வெறும் சமையலுக்கு பயன்படுத்தும் சேடா உப்பு என்பதும் தெரியவந்தது. சங்கீதா இதற்கு முன்பு பாரில் நடன அழகியாக பணியாற்றியதும், தற்போது இப்படி நூதன முறையில் மற்றவர்களை வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications