ஆஹா.. இனி ஒரு பெங்களூர் அல்ல.. "5 பெங்களூர்.." அதிரடி திட்டத்தில் கர்நாடக அரசு
பெங்களூர்: ‛‛பெங்களூரில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால்2040க்குள் பெங்களூருவை போன்று 4 நகரங்களை கட்டமைக்க வேண்டும்'' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறது. இவர் பெங்களூரு நகர வளர்ச்சி துறையையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரு நகரை மேம்படுத்துவது தொடர்பாக ‛பெங்களூரு 2040' என்ற பெயரில் மாநாடு நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

4 நகரங்கள்
பெங்களூர் நகரின் மக்கள் தொகை 1.3 கோடியாக உள்ளது. இது 2040ல் 3 முதல் 4 கோடியாக இருக்கும். இதனால் 2040க்குள் தற்போதைய பெங்களூருவை போன்று குறைந்தபட்சம் 4 நகரங்களை உருவாக்க வேண்டும். சுகாதார வசதி, ஒருங்கிணைந்த தொழில் நகரங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொடர்பான தளவாடங்கள் உற்பத்தி மையங்கள் தேவைப்படும். இதனால் பெங்களூருக்குள் நாம் பல பெங்களூர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் மக்கள் எளிதாக வணிகம், வேலை செய்து வாழ முடியும்.

ஒருங்கிணைந்த நகரங்கள்
கர்நாடகத்தில் அரசு நிலத்தில் 6 புதிய நகரங்களை உருவாக்குவோம். மண்டல அளவில் ஒருங்கிணைந்த நகரங்கள் கட்டமைக்கப்படும். இந்த ஆறு நகரங்களை திட்டமிடும்போது அதற்கு இணையாக பெங்களூருவுக்கான நான்கு புதிய சாட்டிலைட் டவுன் ரிங் ரோடுகள்(எஸ்டிஆர்ஆர்) அமைக்கப்படும். இந்த திட்டங்களை இப்போது தொடங்கினால் மட்டுமே 2040க்குள் சாத்தியமாகும். இவை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருக்கும் நகரமாக இருக்க வேண்டும். தேவனஹள்ளி-மைசூருவை இணைக்கும் எஸ்டிஆர்ஆர் சாலை திட்டம் இந்த ஆண்டு துவங்க உள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும்.

மிகப்பெரிய சவால்
15ம் நூற்றாண்டில் கெம்பேகவுடாவால் பெங்களூரு கட்டமைக்கப்பட்டது. அதன்பிறகு முறையான திட்டங்களின்றி இயற்கை வளங்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நகரம் வளர்ந்தது. பெங்களூருவின் பழங்கால பகுதிகள் என்பது பெங்களூருவின் மையப்பகுதிகள் தான். அதன்பின் மத்திய வணிக மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து 8 நகராட்சிகள், 110 கிராமங்கள் பெங்களூருவுடன் இணைக்கப்பட்டன. அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வருகின்றனர். சாலைகள், நிலத்தடிநீர், வடிகால் வசதி, திறந்த கால்வாய் பிரச்சனைகள் கடினமானதாக உள்ளது. இது மிகப்பெரிய பணி. இதனால் பெங்களூருவுக்கான முறையான திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். இது ஒரு பெரிய சவால் என்பது தெரியும். ஆனால் யாராவது ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே.

முக்கிய திட்டங்கள்
இதனால் தான் மாநில அரசு சாலை, போக்குவரத்தை சீர்செய்தல், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்தரிகரிப்பு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2022ல் நிலைமை மோசமானால் கண்டிப்பாக பெங்களூருவுக்கு முக்கிய திட்டங்கள் இன்னும் தேவையானதாகும். மேலும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல்சாரா அமைப்புகளின் உதவிகள் வேண்டும். இதை சிலர் முன்னெடுத்துள்ளனர். யாரும் அவர்களை ஊக்குவிக்கவில்லை. இந்த நகரம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியை விடுத்து அனைவருக்கான நகர் என ஒன்றாக இணைந்தால் நிச்சயம் சாதிக்கலாம். 2040ம் ஆண்டுக்கான திட்ட பணியை 2022ல் துவங்கினால் குறித்த காலத்துக்குள் முடித்து சாதிக்கலாம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
