இந்த மனசு தான் சார் கடவுள்.. 2 முறை பணம் அனுப்பிய பயணி.. ஆட்டோ டிரைவர் செய்த நெகிழ்ச்சி செயல்
பெங்களூர்: நம்மில், பலருக்கும் ஆட்டோ டிரைவர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் உண்டு. இந்நிலையில் தான், பெங்களூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
‛‛நம்மை சுற்றி நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்'' என்று ரெடிட் வலைதளத்தில் போடப்பட்டுள்ள பதிவு தற்போது இணையதளங்களில் அனைவரின் கவனத்தையும் பெற்று பாராட்டை குவித்து வருகிறது.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நான் ஒரு ‛ரேபிடோ' ஆட்டோவை ‛புக்' செய்தேன். பயணம் முடிந்த பிறகு, நான் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தினேன். ஆனால் ஓட்டுநரின் வங்கி கணக்கில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்தப் பணம் நிலுவையில் இருப்பதாகக் காட்டியது.
யுபிஐ-யில் பணப்பரிமாற்றம்
ஆட்டோ ஓட்டுநர் வேறு ஒரு யுபிஐ ஐடியை கொடுத்து பணம் செலுத்தச் சொன்னார். அந்த ஐடிக்கு பணம் செலுத்த, அது வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே, முதல் கட்டணமும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநருக்கு இரண்டு முறை பணம் கிடைத்தது.
திருப்பி கொடுக்க முடியவில்லை
ஆனால், அவர் உடனடியாக அந்த பணத்தை திருப்பி கொடுக்க முயன்றார். ஆனால், அவரது யுபிஐ பரிமாற்றம் தொடர்ந்து தோல்வியடைந்தது. அவர் இரண்டு முறை பணத்தை திருப்பி கொடுக்க முயற்சித்தார். 2 முறையும் தோல்வியடைந்தது. நான் ஒரு டாக்டரை சந்திக்க அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், ஆட்டோ ஓட்டுநர் எனது தொலைபேசி எண்ணை கேட்டு, பணத்தை பிறகு அனுப்புவதாக உறுதி அளித்தார்.
செல்போன் எண் கேட்ட டிரைவர்
நான் என் செல்போன் எண்ணை கொடுத்தேன். அப்போது கூட நான் 'இப்பணத்தைத் திரும்ப பெற முடியாது' என்றுதான் நினைத்தேன். ஆனால், அன்றிரவு சுமார் 8:30 மணியளவில் அவர் பணத்தை திரும்ப அனுப்பினார்.
இது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய பொதுவாக எதிர்மறையான பிம்பம் உள்ளது. ஆனால் இந்த சம்பவம் என்னை மகிழ்வித்தது. இதனால் தான் இந்த பதிவை பகிர்ந்து கொள்கிறேன்'' என்று கூறிானர்.
குவியும் பாராட்டு
இந்த பதிவை பார்க்கும் பலரும் ஆட்டோ டிரைவரை பாராட்டி வருகின்றனர். அதோடு பலரும் ஆட்டோ டிரைவர்கள் உடனான தங்களின் பயண அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி ஒருவர், ‛‛நன்மை செய்பவர்களை நாம் நினைவுகூர வேண்டியுள்ளது. நல்லவர்கள் அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் இருக்கிறோம். இந்தப் பதிவைப் பகிர்ந்ததற்கு பாராட்டுகள்'' என்று கூறினார்.
இன்னொருவரோ, "படிக்க நன்றாக இருந்தது. ஆனால், இத்தகைய நேர்மையான செயல்கள் விதிவிலக்காகிவிட்ட இன்றைய சமூகத்தைப் பற்றி நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்று கவலை தெரிவித்தார்.
கசப்பான அனுபவம்
மற்றொருவரோ, ‛‛இப்படி நடப்பது மிகவும் அரிதானது. நான் ஒருமுறை தேர்வு எழுத அவசரமாக ஆட்டோவில் சென்றேன். தேர்வு மையத்திற்கு வெளியே ஆட்டோவில் இருந்து இறங்கி ரூ.500யை எடுத்தேன். அப்போது சில்லறை தருவதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர், 500 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டார்'' என்று கூறினார்.
இன்னொருவரோ, "பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்களை பற்றி நான் எதிர்மறையான விஷயங்கள் பல கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், ஏழு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து, பல ஆட்டோ பயணங்களை மேற்கொண்டேன். எனக்கு ஒருபோதும் மோசமான அனுபவம் ஏற்பட்டதில்லை. பல சமயங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினர்." என்று தெரிவித்துள்ளார். இப்படியாக அந்த பதிவுக்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications