வசமாக சிக்கும் RCB..கூட்ட நெரிசல் வழக்கில் ரெடியான குற்றப்பத்திரிகை.. 2,200 பக்கத்தால் புதிய சிக்கல்
பெங்களூர்: பெங்களூர்: பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில் ஆர்சிபி அணியின் நிர்வாகத்தின் அலட்சியமே முக்கிய காரணம் என்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 2,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிஐடி போலீசார் தயாரித்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்லில் கடந்த 17 சீசன்களால் தோல்வியை தழுவி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக சாம்பியன் ஆகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி நடந்த ஐபிஎல் 18 வது சீசனின் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடகா மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பைனல் முடிந்த மறுநாள் ஜூன் 5ம் தேதி ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூருவுக்கு கோப்பையுடன் திரும்பினர்.
பெங்களூர் விதான சவுதா, பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் விதானசவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர். அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆர்சிபி அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு வழக்கு விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சுமார் 2,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தயார் செய்துள்ளது. 100க்கும் அதிகமான சாட்சிகள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் சொன்ன தகவல்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலுக்கான காரணம், 11 பேர் பலியானதன் பின்னணி, அலட்சியமாக செயல்பட்டது யார் ? என்பது பற்றி பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான டிஎன்ஏஆகியவை தான் காரணம்என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கிய பிறகு பாதுகாப்பு கோரி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு முன்பாகவே வெற்றி கொண்டாட்டத்தை நடத்திஉள்ளனர். ஸ்டேடியத்தின் முன்பு மக்கள் பெருமளவில் திரண்டிருந்தும் கதவுகள் திறக்கப்படாமல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததும் 11 பேர் பலியாக காரணம் எனவும் குற்றப்பத்திரிகையில் தகவல் உள்ளதாக கூறப்படுகிறது. இது ஆர்சிபி அணிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கூட்ட நெரிசலுக்கு கர்நாடகா அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆர்சிபி, டிஎன்ஏ மற்றும் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தான் சிஐடி சார்பில் கூட்ட நெரிசலுக்கு 3 ஆர்சிபி, டிஎன்ஏ நிறுவனம், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
