இதெல்லாம் ஒரு குத்தமா? இதுக்கு ரூ.500 அபராதம் போடுவீங்களா? கொந்தளித்த பெங்களூர் மெட்ரோ பயணிகள்
பெங்களூர்: 'நம்ம பெங்களூர்' மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்ணுக்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்திருக்கிறது. இந்த சம்பவம் சோஷியல் மீடியாக்களில் விவாதமாக வெடித்திருக்கிறது.
அப்பெண்ணுக்கு அபராதம் விதித்தது சரி என்று ஒரு தரப்பினரும், தவறு என்று மற்றொரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது கடந்த 26ம் தேதி சோஷியல் மீடியாக்களில் ஒரு வீடியோ பரவலாக ஷேராகியிருந்தது. அதில், மெட்ரோ ரயிலில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பெங்களூரின் 'நம்ம பெங்களூர்' மெட்ரோவில்தான் இந்த சம்வம் நடந்திருக்கிறது. மெட்ரோ விதிமுறைகளின்படி ரயிலில் சாப்பிடக்கூடாது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல கடந்த 28ம் தேதி அப்பெண் மெட்ரோ ஊழயர்களால் அடையளம் காணப்பட்டிருக்கிறார். அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் சோஷியல் மீடியா சலசலப்புகளுக்கு காரணம். பெண்களுக்கு வீட்டிலேயே வேலைகள் அதிகம். கணவனை வேலைக்கு அனுப்புவது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, இதற்காக சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என அதிக வேலைகள் இருக்கின்றன. இதற்கு நடுவில் அவர்களுக்கு சாப்பிட நேரமே கிடைப்பதில்லை. எனவேதான் டிராவல் நேரத்தில் அவர்கள் உணவை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வீடியோவில் இதுதான் நடந்திருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது வீடியோவில் உள்ள பெண், பர்கர் போன்ற உணவைதான் சாப்பிட்டிருக்கிறார். கையில் டிஸ்யூ பேப்பரை வைத்திருக்கிறார். அவர் எங்கும் குப்பையை போடவில்லை. அப்படி இருக்கையில் எதற்காக ரூ.500 அபராதம்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினரோ, ரூல்ஸ் எனில் எல்லோருக்கும் அது ஒன்றுதான். அதை யார் மீறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அப்பெண் மெட்ரோ ரயிலில் சாப்பிட்டதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இன்னைக்கு இவருக்கு விதி விலக்கு கொடுத்தால் நாளைக்கு மற்றவர்களும் அதையே கேட்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
காலை உணவு எல்லோருக்குமே முக்கியமானதாகும். இந்தியாவில் சுமார் 25% பேர் அதாவது 30 கோடி பேர் காலை உணவை எடுத்துக்கொள்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவை எடுத்துக்கொள்பவர்களில் சுமார் 72% பேர் போதிய அளவுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக 18-40 வயதுக்கு உட்பட்டவர்களில் 80% பேரால் காலை உணவை எடுத்துக்கொள்ள முடிவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இதில் அதிக அளவில் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு வரும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்த காலை உணவு பற்றாக்குறைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆக இது சமூகம் சார்ந்த பிரச்சனை. இதற்கு யதார்த்தமான தீர்வை காண்பதுதான் சரியாக இருக்க முடியும். அப்படி பார்த்தால் அப்பெண்ணுக்கு அபராதம் விதித்தது தேவையற்றது. வேண்டுமெனில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவகங்களை அமைக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! அப்பெண்ணுக்கு அபராதம் விதித்தது சரியா? அல்லது தவறா? இதுபோன்று வீடியோவை எடுத்து பகிர்வது தனியுரிமை மீறலா? என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications