கர்நாடகா சட்டசபையே தொடங்கிடுச்சு - எதிர்க்கட்சி தலைவர் யார்? முடிவெடுக்க முடியாமல் முட்டிமோதும் பாஜக!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்யாமலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு சென்றுள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வென்றது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்றனர்.

கர்நாடகா காங்கிரஸ் அரசின் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று உரையாற்றுகிறார். சட்டசபை தேர்தல் முடிவடைந்து மாதங்கள் உருண்டோடிவிட்டன; பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையிலும் கூட கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாஜக தீர்மானிக்க முடியாமல் திணறி வருகிறது.
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பாஜக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். டெல்லி மேலிடத்துடனான ஆலோசனைக்குப் பின்னர் பாஜக மேலிட பிரதிநிதிகள் பெங்களூர் வருகை தர உள்ளனர். பெங்களூரில் இன்று பிற்பகல் நடைபெறும் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் அரக ஞானேந்திரா, ஆர். அசோகா, விஜயபுரா எம்.எல்.ஏ. பசாகவுடா பாட்டீல், சோமண்ணா என பல பாஜக தலைவர்களது பெயர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் எதிர் கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
