அல்லு அர்ஜுனை மட்டும் கைது பண்ணாங்களே.. சித்தராமையா, டிகே சிவகுமாரை கைது செய்வார்களா? பாஜக பாய்ச்சல்
பெங்களூர்: பெங்களூரில் ஆர்சிபி வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்வார்களா, அவர்கள் கைது செய்யப்படுவார்களா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
அல்லு அர்ஜுனை கைது செய்தது போல சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகியோரையும் கைது செய்வார்களா? இப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார் என்று பாஜக எம்.பி சம்பித் பத்ரா காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் கோப்பை வென்ற ஆர்சிபிக்கு பாராட்டு விழா
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது. பெங்களூர் விதான் சௌதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ஆர்சிபி அணியினரின் வெற்றி அணிவகுப்பு மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்து ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலை ஏற்பட்டது. மாலை 5 மணிக்கு வெற்றி அணிவகுப்பு தொடங்கும் முன்பே சின்னசாமி மைதானத்திற்கு அருகில் அதிகப்படியான கூட்டம் கூடியது. லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெங்களூர் கொடூரம்
35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலரும், பெங்களூரில் நடந்த இந்த துரதிருஷ்ட சம்பவத்துக்கு தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். ஆர்சிபி அணி வகுப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பாஜக குற்றச்சாட்டு
இந்த நிலையில், டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக எம்பி சம்பித் பத்ரா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். "பிசிசிஐ தலைவரும் ஐபிஎல் தலைவரும் வெற்றிப் பேரணி குறித்து தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு முன்னதாகவும் வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு நாட்களுக்கு பின்னரே முழு ஏற்பாட்டுடன் நடத்தப்பட்டிருக்கிறது.
கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் ஆர்சிபி அணியினரை வெற்றி பேரணி நடத்த கட்டாயப்படுத்தி உள்ளனர். வெறும் 12 மணி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன்விளைவாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்சிபி வெற்றி விழாவுக்கு அனுமதி அளித்தது யார்? கூட்ட நெரிசலில் மரணம் நிகழ்ந்தபோதும் நிகழ்ச்சியை தொடர யார் அனுமதித்தார்கள்?
சித்தராமையா, டிகே சிவகுமாரை கைது செய்வார்களா?
இது மாநில அரசின் தோல்வி. கூட்ட நெரிசலால் ரசிகர் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அதே அடிப்படையில் சித்தராமையாவையும், டி.கே.சிவக்குமாரையும் கைது செய்வார்களா? மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார்? சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் ராஜினாமா செய்யச் சொல்வாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல, இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் அசோகா, "லட்சக்கணக்கான மக்கள் கூடிய ஒரு அரங்கத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட எந்த அவசரகால அமைப்புகளும் இல்லை.. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு மனசாட்சி இருந்தால், தங்கள் பிரச்சாரத்திற்காக அப்பாவி மக்களை பலி கொடுத்தவர்கள், இப்போதே ராஜினாமா செய்து வீட்டிற்கு செல்ல வேண்டும்," என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications