‛‛வியந்த மக்கள்’’.. அயோத்தி பால ராமர் போலவே இருக்கே.. கர்நாடகாவில் கிடைத்த விஷ்ணு சிலையை பாருங்க!
பெங்களூர்: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 வயது பால ராமர் சிலையை போன்று நூற்றாண்டு பழமையான விஷ்ணு சிலை கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதாரங்களை குறிக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த விஷ்ணு சிலையிலும் அதுபோன்ற வடிவம் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோலாகலகமாக கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த மாதம் 22ம் தேதி மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கோவிலில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு சடங்குகள் செய்து வைத்தார். அதன்பிறகு சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள இந்த 5 வயது பால ராமர் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்துள்ளார். 51 இன்ச் உயரம் 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம்,பரசுராமர், ராமர், கண்ணன், புத்தர், கல்கி ஆகிய தசாவதாரங்கள் சிற்பங்களாக உள்ளன. அதுமட்டுமின்றி பிரம்மனும், ருத்திரனும் இரண்டு பக்கமும் சிற்பங்களாக செதுக்கப்படுள்ளன. ஒரு பக்கம் அனுமனும் மற்றொரு பக்கம் கருடனும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிலையின் கீழ் பகுதியில் நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலை போன்று விஷ்ணு சிலை ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவசுகூர் கிராமத்தில் ஓடும் ஆற்றின் அருகே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது தான் 2 சிலைகள் கிடைத்தது. நூற்றாண்டு பழமையான விஷ்ணு சிலை மற்றும் சிவன் சிலை கிடைத்துள்ளது.
இதில் விஷ்ணுவின் சிலை என்பது அயோத்தி ராமர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலையை போல் உள்ளது. இதையடுத்து 2 சிலைகளும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகள் குறித்த ஆய்வு தற்போது தொடங்கி உள்ளது. இதுபற்றி வரலாறு மற்றும் தொல்லியல் விரிவுரையாளரான டாக்டர் பத்மஜா தேசாய், ‛தற்போது கிடைத்துள்ள விஷ்ணு சிலை தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. பீடத்தின் மீது சிரித்த முகத்துடன் விஷ்ணு காட்சியளிக்கிறார். இந்த சிற்பத்தை சுற்றிய அலங்கார வளைவு என்பது மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், ராமர், கிருஷ்ணர், புத்தர் மற்றும் கல்கி உள்ளிட்ட விஷ்ணுவின் 10 அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications