கல்விக் கூடங்கள் மட்டுமல்ல.. பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும்! பாஜக நிர்வாகி பகீர்!
பெங்களூர்: ‛‛வரும் நாட்களில் கல்லூரிகள் மட்டுமின்றி பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் வாய்ப்புள்ளது. இந்து நாடு (இந்து ராஷ்ட்டிரா) எனும் கனவு காணும் நாம் இதை முதலில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உலக நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்க முடியும்'' என பாஜகவின் ஓபிசி பிரிவு தேசிய பொது செயலாளர் யஷ்பால் சுவர்ணா கூறினார்.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தின. கல்வி நிறுவனங்களில் யூனிபார்ம் முறையை பின்பற்ற கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஹிஜாப் தடை
மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

யூனிபார்ம் நடைமுறை
இதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் உயர்நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் யூனிபார்ம் நடைமுறையில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் புறக்கணிப்பு
இதனால் மாணவிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10ம் வகுப்பு தேர்வை ஏற்கனவே மாணவிகள் புறக்கணித்த நிலையில் இன்று துவங்கிய பியூ 2ம் ஆண்டு பொதுத்தேர்வையும் மாணவிகள் ஆங்காங்கே புறக்கணித்தனர். சில மாணவிகள் ஹிஜாப் அகற்றி தேர்வு எழுதினர்.

பொதுஇடத்திலும் ஹிஜாப் தடை
இந்நிலையில் தான் பாஜகவின் ஓபிசி பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யஷ்பால் சுவர்ணா இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் நாட்களில் கல்லூரிகள் மட்டுமின்றி பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் கூட நாம் இந்து நாடு (இந்து ராஷ்ட்டிரா) என்பதை கனவாக கொண்டுள்ளோம். இதை நனவாக்க பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு முன்பே முதலில் நாம் இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உலக நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்க முடியும்'' என தெரிவித்துள்ளார்.

யார் இந்த யஷ்பால் சுவர்ணா
யஷ்பால் சுவர்ணா கர்நாடகத்தை சேர்ந்தவர். இவர் பாஜகவின் ஓபிசி பிரிவின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் தட்சிண கன்னடம்-உடுப்பி மாவட்ட மீனவர் கூட்டுறவு அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பல பாஜக தலைவர்கள் வரவேற்றனர். இந்நிலையில் தான் யஷ்பால் சுவர்ணா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications