இதுதான் சான்ஸ்.. தொகுதி பங்கீட்டில் நெருக்கடி கொடுக்கும் மஜத.. விழி பிதுங்கும் காங்.
Recommended Video

பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் கூடுதலாக இடங்கள் கேட்டு மதசார்பற்ற ஜனதாதளம் அடம்பிடிப்பதால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி விழிபிதுங்கி போயுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. மஜத கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இரு கட்சிகளும் இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறி பாஜகவுக்கு சாதகமாக சென்று விடும் என்ற அச்சம் இருதரப்பிலும் உள்ளது. அதிலும் காங்கிரசுக்கு கூடுதலாக உள்ளது.

கூடுதல் சீட்டுகள்
மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சிகளில் ஒன்று காங்கிரஸ் என்பதால் இந்த பதற்றம் இயல்பானது. இதை பயன்படுத்திக்கொண்டு தொகுதி பங்கீட்டில் கூடுதல் சீட்டுகள் கேட்டு அடம் பிடித்து வருகிறது மதசார்பற்ற ஜனதா தளம். இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக இரு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

ஆரம்பம்
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா, லோக்சபா தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் இன்னும் மூன்று நாட்களுக்குள் இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார். மதசார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச்செயலாளர் தனிஷ் அலி, கூறுகையில், இப்போதுதான் தொகுதி பங்கீடு குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இன்னும் பல சுற்றுகள் முடிவடைந்த பிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டணி பங்கீடு
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 25 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணியின் திட்டமாக உள்ளது. எனவே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின்போது மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இரு கட்சி தலைவர்களும் மிகுந்த ஜாக்கிரதையாக உள்ளனர்.

அதிருப்தி
இருப்பினும் தென் கர்நாடகாவில் மட்டுமே பலமிக்கதாக உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட்டால் தங்கள் வாக்கு வங்கி பதம் பார்க்கப்படும் என்ற அச்சமும் காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ளதால், அக்கட்சியின் கோரிக்கைக்கு பல்லை கடித்தபடி பணிந்து செல்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications