என்ன இப்படி கிளம்பிட்டாங்க?! கேஸ் சிலிண்டருக்கு மாலை.. காங். லீடர் செயலால் ஷாக் ஆன செய்தியாளர்கள்!
பெங்களூர் : கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சூடம் காட்டி பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்.
கர்நாடகாவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதாலும், இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதாலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், காங்கிரஸ் தான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும். இந்த நம்பரை எட்ட பாஜகவும், காங்கிரஸும் தீவிர பணிகளில் ஈடுபட்டன. அதிரடியாக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமா படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.1500, 200 யுனிட் வரை இலவச மின்சாரம் என காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் கர்நாடகா மக்களைக் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆளும் பாஜகவுக்கு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவை பெரும் சிக்கலாக மாறியுள்ளது. சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானியர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி கையிலெடுத்து பிரச்சாரக் களத்தில் பயன்படுத்தி வருகிறது.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் தனது தேர்தல் பிரசாரத்தில் விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை முக்கியமான பிரச்சனையாக முன்வைத்தார். சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு செலுத்த புறப்படும் முன்பு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரை கும்பிட்டு விட்டு வாருங்கள். அதன்பிறகு யாருக்கு வாக்கு செலுத்தலாம் என முடிவு செய்யுங்கள் எனக் கூறினார்.
மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2014ஆம் ஆண்டிற்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 410 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 1,150ஐ எட்டிவிட்டது, சிலிண்டர் விலையை உயர்த்தி சாமானிய மக்களை நிலைகுலையச் செய்த பாஜகவுக்கா உங்கள் ஓட்டு என காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இது நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் நாளை காலை வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், இன்று பிரஸ்மீட் அறிவிப்பு வெளியிட்டார் கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் குவிந்த நிலையில், ஒரு கேஸ் சிலிண்டரை வைத்து, அதற்கு மாலை அணிவித்து வணங்கி, சூடம் காட்டி பூஜை செய்தார் டி.கே.சிவகுமார்.
இது அங்கிருந்த செய்தியாளர்கள் மட்டுமல்லாது பாஜக தரப்புக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் கடுமையான விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் நூதனமான முறையில், டி.கே.சிவகுமார் செயல்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications