இணைந்த கைகள்.. சித்தராமையா, டிகே சிவக்குமார் திடீர் போட்டோஷூட்.. பின்னணி இதுதான்! திரும்பும் பாஜக
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து திடீரென போட்டோஷூட் நடத்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இதன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி பாஜகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வருகிறது. 40 சதவீத கமிஷன் புகார், ஹிஜாப், ஹலால் உணவு பிரச்சனை, தேர்தலில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்தது, எடியூரப்பாவின் அரசியல் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக நெருக்கடி நிலையில் உள்ளது. மேலும் தேர்தலில் கர்நாடகா தலைவர்களில் யாரை முன்நிறுத்துவது என்பதில் பாஜக மேலிடம் குழம்பி போய் உள்ளது.

மாறாக காங்கிரஸ் கட்சியில் பாஜகவை போன்ற சூழல் இல்லை. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
கருத்து கணிப்புகள்: கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. 24ம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதனால் அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவும், சில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும் உள்ளன. அதேவேளையில் பல கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை உருவாகும். ஜேடிஎஸ் கிங்மேக்கராக உருவாகும் எனவும் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் வியூகம்: இருப்பினும் கூட கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி சர்வேயை பொறுத்தமட்டில் நிச்சயம் அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதாவது கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியமைக்க தேவையான 113 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் என காங்கிரஸ் மேலிடம் நம்பிக்கை வைத்துள்ளது. இதனால் தான் தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணி மற்றும் கடந்த முறை 5 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த தொகுதிகளில் தீவிர களப்பணியை காங்கிரஸ் தொடங்கி உள்ளது.

போட்டோஷூட்: இதன் ஒருபகுதியாக தான் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் மாறி மாறி ஒருவருக்கொருவர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் கொடிக்கான அடையாளத்தை சட்டையில் பொருத்துகின்றனர். மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் நெருக்கமாக ஒருவருக்கொருவர் தோள்களில் கைவைத்து சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
உற்சாகப்படுத்த முடிவு: இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த போட்டோ மற்றும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியினர் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‛‛ஒன்றாக இணைந்து நம்மால் வெற்றி பெற முடியும்'' என தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
காரணம் என்ன: கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும். தற்போது இருவருக்கும் இடையேயும் அடுத்த முதல்வர் யார்? என்பதில் போட்டி உள்ளது. இருவரும் இதனை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனால் இருதலைவர்களும் சேர்ந்து தங்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்பதை கூறும் வகையில் இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டு போட்டோ, வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை பாஜக உற்று கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications