கர்நாடகாவில் காங். ஆட்சியில் மக்கள்தொகை கூடியது ஏன் தெரியுமா? மத்திய அமைச்சர் கொடுத்த அடடே விளக்கம்!
கர்நாடகாவில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி செய்த போது மின்சாரம் போதிய அளவு வழங்கப்படவில்லை. இதனால், மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி செய்த போது மின்சாரம் போதிய அளவு வழங்கப்படவில்லை. இதனால், மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார். மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறைக்கான அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும் விவாதப்பொருளாகியுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக தேர்தல் களம்
இதனால், கர்நாடக தேர்தல் களம் படிப்படியாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் தேதிதான் அறிவிக்கவில்லையே தவிர தேர்தல் பணிகளை ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி கர்நாடகாவில் அடிக்கடி பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் அடிக்கடி கர்நாடகாவிற்கு விசிட் செய்து வருகின்றனர். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

பிரகலாத் ஜோஷி பேச்சு
மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் திவீரமாக உள்ளது. பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை தற்போதே வெளியிட்டு வருகிறது. அதுபோக கர்நாடக மாநில பாஜக தலைவர்களும் மாநிலம் முழுக்க கட்சியினரையும் மக்களையும் சந்தித்து வருகின்றனர். சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆளும் விஜய பாஜக சங்கல்ப்ப யாத்திரை என்ற பெயரில் பேரணியை நடத்தி வருகிறது. இந்த யாத்திரையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார். வாகனத்தில் இருந்தபடி பேரணியாக சென்ற பிரகலாத் ஜோஷி கட்சியினர் மத்தியிலும் பேசினார்.

இதனால் தான் மக்கள்தொகை கூடியது
ஹஸ்சன் மாவட்டத்தில் உள்ள பெல்லூர் பகுதியில் பேசிய பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் ஆட்சியில் மின்பற்றாக்குறை நிலவியதாக விமர்சித்து பேசினார். மேலும் பிரகாலாத் ஜோஷி கூறுகையில், "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது மின் தட்டுப்பாடு நிலவியது. காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது மக்கள் தொகை கூடியது. ஏனெனில் அவர்கள் ஆட்சி காலத்தில் மின்சாரம் உரிய முறையில் வழங்கப்படவில்லை" என்றார். முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை பிரகாலாத் ஜோஷி காங்கிரஸ் கட்சியை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ஆதாரங்களை கொடுப்பது இல்லை
பிரகலாத் ஜோஷி கூறுகையில், "அதிகாரத்தில் இருந்து நீண்ட காலம் ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சி மன சமநிலையை இழந்துவிட்டது. ராகுல் காந்தி தனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கிடைப்பதில்லை என்கிறார். ஆனால், அவர் பேசும் போது எல்லாம் எந்த வித ஆதாரங்களும் இன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை குறித்து கேட்டால் எந்த ஆதாரங்களையும் கொடுப்பது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications