ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றாரா அண்ணாமலை? தேர்தல் ஆணையம் பரபர விளக்கம்! என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான அண்ணாமலை உடுப்பி பயணத்தின்போது ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இது பூதாகரமாக வெடித்த நிலையில் அண்ணாமலை முற்றிலுமாக மறுத்தார். இருப்பினும் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பிய நிலையில் அண்ணாமலை பணம் எடுத்து சென்றாரா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். அண்டை மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலைக்கு கட்சி மேலிடம் புதிய பொறுப்பை வழங்கியது. அதன்படி அண்ணாமலை கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பாஜக இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அண்ணாமலை கர்நாடகா அரசியலில் பிஸியாக உள்ளார். வேட்பாளர் தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போது அவர் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறார். இதற்காக மாநிலம் முழுவதும் அவர் சென்று வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த 17 ம் தேதி அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அண்ணாமலை வைத்திருந்த பேக்கில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய்குமார் சொரகே தெரிவித்தார். மேலும் இதுபற்றி விசாரிக்கும்படி அவர் மாவட்ட தேர்தல் அலுவலர் உள்பட பல்வேறு தரப்பிடம் வலியுறுத்தினர்.
மேலும் இந்த செய்தி கர்நாடகாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. அண்ணாமலை அரசியலில் நுழைவதற்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். குறிப்பாக உடுப்பி மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நிலையில் இந்த குற்றச்சாட்டு பெரிய விவாதத்தை கிளப்பியது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை முற்றிலுமாக மறுத்தார்.
இதுபற்றி அண்ணாமலை, அதிக இடங்களில் நிகழ்ச்சிகள் இருந்ததால் ஹெலிகாப்டரில் பயணித்தாக அவர் விளக்கம் அளித்தார். ஆனாலும் தொடர்ந்து பத்திரிகைகளில் இதுதொடர்பான செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் அண்ணாமலை பணம் எடுத்து சென்றாரா? இல்லையா? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்களின் சாராம்சம் வருமாறு:
‛‛ஏப்ரல் 17 ல் உடுப்பி ஹெலிகாப்டர் பயணத்தின்போது அண்ணாமலை பணம் எதுவும் எடுத்து செல்லவில்லை. அண்ணாமலையின் உடுப்பி மாவட்ட ஹெலிகாப்டர் பயணத்தின்போது தேர்தல் தொடர்பான விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை. ஹெலிகாப்டர் தளத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அண்ணாமலையிடம் சோதனையிட்டனர். மேலும் உடுப்பி சென்று திரும்பும் வரை அண்ணாமலையிடம் பல்வேறு நிலைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 5 முறை சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது அவர் வைத்திருந்த பேக்கில் ஆடைகள் மட்டுமே இருந்தன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது
****












Click it and Unblock the Notifications