ஜண்டா.. ஜண்டா.. நள்ளிரவில் கேட்ட அந்த சத்தம்.. மந்திரவாதியால் பீதியில் உறைந்த பெங்களூர் மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் நள்ளிரவில் ‛பேய் விரட்டுவதாக..' கூறி மந்திரங்களை கூறி வந்த மந்திரவாதியால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இரவில் தூங்க முடியாமல் அவர்கள் தவித்தனர். போலீசார் வந்து மந்திரவாதியை வார்னிங் செய்த நிலையில் மறுநாள் காலையில் புகார் செய்தவரின் வீட்டுக்கு சென்று ‛ரத்தவாந்தி எடுத்து ஒரு மாதத்தில் இறந்துவிடுவாய்' என்று சாபமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் கெங்கேரி அருகே உல்லால் உபநகர் உள்ளது. இங்கு வசித்து வுருபவர் சீனிவாஸ் சுவாமி. இவர் தன்னை ஒரு மந்திரவாதி என்று கூறி கொள்கிறார். மேலும் பேய் பிடித்தவர்களை அதில் இருந்து மீட்பேன் என்பது உள்பட பல விஷயங்களை அவர் கூறி வருகிறார்.

இதனை நம்பி பலரும் சீனிவாஸ் சுவாமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் அவர் அடிக்கடி பூஜை என்ற பெயரில் மந்திரங்களை கூறி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சீனிவாஸ் சுவாமி சம்பவத்தன்று ஸ்பீக்கர் வைத்து பூஜை செய்துள்ளது. நள்ளிரவில் ஸ்பீக்கரில் ‛ஹ்ரீம்.. ஹ்ரீம்.. ஹ்ரூம்.. பட்.. பட்'' என மந்திரங்கள் சொல்லி உள்ளார். இது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இடையூறாக அமைந்தது. அவர்களால் தூங்க முடியவில்லை. அதுமட்டுமின்றி சீனிவாஸ் சுவாமி தொடர்ந்து இந்த வார்த்தையை உச்சரித்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் பயந்துபோயினர்.
இதனால் அவர்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 112 என்ற எண்ணுக்கு போன் செய்து புகாரளித்தனர். இதையடுத்து போலீசார் ஒய்சாலா வாகனத்தில் வந்து சீனிவாஸ் சுவாமியை அழைத்து வார்னிங் செய்தனர். அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றனர். இதனால் கோபமடைந்த சீனிவாஸ் சுவாமி மறுநாள் காலையில் போலீசில் புகாரளித்த பக்கத்து வீட்டுக்காரின் வீட்டுக்கு சென்றார்.
அதன்பிறகு வீட்டு முன்பு நின்றபடி, ‛‛இன்னும் ஒரு மாதத்தில் ரத்த வாந்தி எடுத்து செத்து விடுவாய்' என்று சாபம் விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுகாரர் சம்பவம் தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றத்தை அணுகினர். விசாரணை நடத்திய நீதிமன்றம் ஞானபராதி போலீசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
மந்திரவாதி என கூறி கொள்ளும் சீனிவாஸ் சுவாமி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஞானபாரதி போலீசார் சீனிவாஸ் சுவாமி மீது கர்நாடகா மூடநம்பிக்கை மற்றும் சூனியம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி போலீஸ் சார்பில், ‛‛சீனிவாஸ் சுவாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைப்போம். அவரை கடுமையாக வார்னிங் செய்துள்ளோம்'' என்றனர்.
இதுபற்றி பெங்களூர் மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ் கூறுகையில், ‛‛மாந்திரீகம், மந்திரத்தை நம்பி மக்கள் ஏமாற வேண்டும். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கலாம். அதேவேளையில் புகார்தாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். விசாரணையின்போது போதிய ஒத்துழைப்பு, ஆதாரங்களை வழங்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் சிரமங்கள் உள்ளது'' என்றார்.


Click it and Unblock the Notifications
