அமித்ஷாவை செங்கோட்டையன் சந்திக்கல.. அவரிடம் ஒரு எம்எல்ஏ கூட இல்லை! ட்விஸ்ட் வைத்து பேசிய புகழேந்தி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக பரபரப்பு கிளம்பியிருக்கக்கூடிய நிலையில், ஒரு எம்.எல்.ஏவை கூட தன் கைவசம் வைத்திருக்காத செங்கோட்டையனை அமித்ஷா சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் செங்கோட்டையனை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் செயல்பாடுகளுக்கு அதிமுக இரையாகக் கூடாது எனவும் பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கே.ஏ. செங்கோட்டையன். கோபி செட்டி பாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் செங்கோட்டையனின் சமீபத்திய நடவடிக்கைகள் அதிமுகவிற்குள் புயலை கிளப்பி வருகிறது. அதாவது, சமீப காலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை தவிர்த்து வந்தார் செங்கோட்டையன்.

டெல்லி சென்ற செங்கோட்டையன்
அதோடு, சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக எடப்பாடி கூட்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அந்த நேரத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். இத்தகைய சூழலில் தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.
அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லிக்கு தனியாக சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விலகியே செயல்படும் செங்கோட்டையன், டெல்லிக்கு தனியாக சென்று வந்தது அதிமுக வட்டாரத்தில் மட்டும் இன்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவை சந்திக்கவில்லை

அமித்ஷாவை சந்தித்து பேசியது தொடர்பாக பரப்பப்படும் செய்திகளை செங்கோட்டையன் தரப்பிலும் இதுவரை மறுக்கவில்லை. செய்தியாளர்கள் நேற்று, டெல்லி பயணம் தொடர்பாக கேள்வியை எழுப்பினர். ஆனால் செங்கோட்டையன் வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்கவில்லை "மவுனம் அனைத்தும் நன்மைக்கே" என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில், "செங்கோட்டையன், அமித்ஷாவை சந்திக்கவில்லை" என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் புகழேந்தி கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிவிட்டார். இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
வேதனை தருகிறது
டெல்லியில் அதிமுக அடகு வைக்கப்பட்டு இருப்பது வேதனை தருகிறது. செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்ததாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. செங்கோட்டையனிடம் ஒரு எம்.எல்.ஏ கூட கிடையாது. தனியாக அழைத்து பேசுவதாக இருந்தால் 4 எம்.எல்.ஏக்களை கொண்ட ஓ பன்னீர் செல்வத்தை அழைத்து சந்தித்து இருக்க வேண்டும். டெல்லி சென்றேன் என செங்கோட்டையன் கூறியிருக்கிறாரா? நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய பழைய புகைப்படங்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
டெல்லி சென்று விட்டு வந்த அதிமுகவினர், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி அமையும் என்று ஏன் கூறவில்லை. செங்கோட்டையனை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களின் செயல்பாடுகளுக்கு அதிமுக இரையாகக் கூடாது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசவில்லை. தேவையில்லாமல் ஏன் புரளி கிளப்பிவிடுகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications