ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் அடிப்படை கடமை கிடையாது.. உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பரபர வாதம்
பெங்களூரு : ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசியமான பழக்கம் இல்லை எனவும், அதே நேரத்தில் ஹிஜாபை அரசு எங்கும் எதிர்க்கவில்லை கல்லூரிக்கு உரிய சீருடையை அணிய வேண்டும் என்றுதான் அரசு உத்தரவில் கூறி இருக்கிறோம் என கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்துள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து தீவிரம் அடைந்து கொண்டு இருக்கிறது. பியு கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி கேட்டு இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் அதே சமயம் விசாரணை முடியும் வரை மாணவ, மாணவியர் ஹிஜாப், காவி ஷால் உள்ளிட்ட எந்த மத அடையாளங்களோடும் வகுப்பிற்கு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

ஹிஜாப் வழக்கு
இன்று விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் பிரபுலிங் கே நவடாகி ஆஜர் ஆனார். அவர் தனது வாதத்தில், பிப்ரவரி 5ம் தேதி மாணவ, மாணவிகள் எல்லோரும் யூனிபார்ம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.அரசு சார்பில் போடப்பட்ட இந்த உத்தரவில், ஹிஜாப்பை அரசு எங்கும் எதிர்க்கவில்லை. கல்லூரி கமிட்டி சொல்லும் யுனிபார்மை அணிய வேண்டும் என்றுதான் அரசு உத்தரவில் கூறி இருக்கிறோம். அரசு உத்தரவை 10 முறை படித்து பார்த்தால் கூட அதில் ஹிஜாப்பிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட இல்லை.

யூனிபார்ம் முக்கியம்
இதை சிலர் தவறாக அர்த்தம் கொண்டு இருக்கிறார். நாங்கள் சொல்வது எல்லாமே கல்லூரி கமிட்டி சொல்லும் யுனிபார்மை அணியுங்கள் என்பதுதான் என்று அரசு தரப்பு வாதம் வைத்தது, என்று வாதம் வைத்தார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு ஹிஜாப்பிற்கு எதிராக பேசவில்லை என்றால் அதை பற்றிய வழக்கு எடுத்துக்காட்டுகளை ஏன் தங்கள் உத்தரவில் குறிப்பிட வேண்டும்.ஹிஜாப் தடை என்பது அடிப்படை உரிமை 25க்கு எதிரானது இல்லை என்று ஏன் நீங்கள் வாதம் வைக்க வேண்டும்.

ஹிஜாப் பிரச்சனை இல்லை
ஹிஜாப் பிரச்சனை இல்லை என்றால் அரசு தரப்பு ஏன் இந்த வாதங்களை வைக்க வேண்டும். ஹிஜாப்பை நீங்கள் எதிர்க்கவில்லை என்று கூறி உள்ளீர்கள். அப்படி என்றால் ஏன் அதற்கு எதிரான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர், நாங்கள் ஹிஜாப்பை எதிர்க்கவில்லை. நாங்கள் சொன்னது ஒரே ஒரு விஷயம்தான். கல்லூரி கமிட்டி அறிவிக்கும் யுனிபார்மை மாணவ, மாணவியர் அணிய வேண்டும். கல்லூரி கமிட்டிக்கு நாங்கள் இதில் முழு சுதந்திரம் அளித்துள்ளோம் என்று, ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசியமான பழக்கம் இல்லை எனவும், அதே நேரத்தில் ஹிஜாபை அரசு எங்கும் எதிர்க்கவில்லை கூறினார்.

அரசுக்கு அதிகாரம் உள்ளது
இதையடுத்து நீதிபதிகள் தரப்பு, கல்லூரி கமிட்டி ஹிஜாப்பை அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டனர். இதற்கு அரசு தரப்பு, கல்லூரி கமிட்டியின் முடிவை மாற்றும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. ஆனால் இப்போதைக்கு கல்லூரி கமிட்டிக்கு நாங்கள் முழு சுதந்திரம் வழங்கி இருக்கிறோம் என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், சரி நீங்கள் ஹிஜாப்பை எதிர்க்கவில்லை. அப்படி என்றால் ஏன் உங்கள் அரசு உத்தரவில் ஹிஜாப்பிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்காட்டினீர்கள்? என்று நீதிபதிகள் கேட்டனர்.

அரசு உத்தரவு ஏன்?
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது விளக்கத்தில், அது எங்கள் தவறு.. அதை நாங்கள் செய்திருக்க கூடாது. அனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நாங்கள் சொல்வது எல்லாம் கல்லூரி கமிட்டிதான் யூனிபார்ம் பற்றி முடிவெடுக்க முடியும். அவர்கள் சொல்வதை மாணவ, மாணவிகள் கேட்க வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து கல்லூரி கமிட்டி எப்படி உருவாக்கப்படும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

ஒப்புதல்
அதற்கு இது எம்எல்ஏ தலைமையில் கல்லூரி நிர்வாகம் உருவாக்கும் கமிட்டி, அரசு இதற்கு கடைசியில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்கு நீதிபதிகள் எம்எல்ஏ தலைமையிலான கமிட்டி கல்லூரி யுனிபார்மை முடிவு செய்தால் அதில் அரசியல் தலையீடு இருக்குமோ என்று கேட்டார். அதற்கு அரசு தரப்பு, பல வருடமாக இந்த கமிட்டிகள் உள்ளன. எந்த அரசியல் பிரச்சனையும் இல்லை என்று வாதம் வைத்தார். இதையடுத்து மீதம் உள்ள வாதங்களை திங்கள் கிழமை வைப்பதாக அரசு தரப்பு கூறியதை அடுத்து வழக்கு திங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications