நோ ஹிஜாப், காவி ஷால்.. மைனாரிட்டி கல்வி நிறுவனங்களிலும் வந்தது தடை.. கர்நாடக அரசு புது உத்தரவு!
பெங்களூர்: கர்நாடகாவில் மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரிய போராட்டமாக உருவெடுத்த நிலையில், அம்மாநில அரசு ஹிஜாப், காவி ஷால் உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவர்கள் வகுப்பிற்கு வர தடை விதித்தது.
இதையடுத்து கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடியும் வரை மாணவ, மாணவியர் மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹிஜாப் தடை
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சார்பாக பல்வேறு பியு கல்லூரிகள், பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்காக பல்வேறு இடங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குதான் தற்போது மத ரீதியான அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டள்ளது.

சிறுபான்மை நலத்துறை
இது தொடர்பாக அம்மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடக உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் மத அடையாளையங்களை அணிய இடைக்கால தடை விதித்து உள்ளது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை மத அடையாளங்களை அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை சிறுபான்மை நலத்துறை சார்பாக நடத்தப்படும் மைனாரிட்டி பள்ளிகளுக்கும் பொருந்தும். மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

மத அடையாளம்
இதனால் இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஹிஜாப், காவி ஷால் போன்ற மத அடையாளங்கள் அணியாமல் வகுப்பிற்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பாக நிறைய கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இதில் சில கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு ஹிஜாப்தான் யுனிஃபார்மாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினருக்காக தனியாக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகும்.

காவி ஷால் தடை
இந்த நிலையில்தான் ஹிஜாப் போன்ற மத நம்பிக்கைகளை பின்பற்றாமல் வர வேண்டும் என்று இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாணவிகளும் ஹிஜாப் அணியாமல் வகுப்பிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹைகோர்ட் உத்தரவு அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பொருந்தும் என்பதால் இந்த கட்டுப்பாட்டை விதித்து இருப்பதாக அம்மாநில அரசின் சிறுபான்மை நலத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications