திடீரென கேட்ட "அலறல்" சத்தம்! மாணவியை பல முறை குத்தி கொடூரமாக கொன்ற இளைஞர்! காதல் விவகாரத்தில் பகீர்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள பிரசிடென்சி கல்லூரி வளாகத்திலேயே வைத்து 19 வயது மாணவி ஒருவர், கத்தியால் கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் காதல் விவகாரங்களில் பெண்களை ஆண்கள் அத்துமீறித் தாக்கும் போக்கும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, பரங்கிமலையில் ரயில் நிலையத்தில் வைத்து ஒருதலை காதல் விவகாரத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யா என்ற பெண்ணை ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் நினைவில் இருக்கும்.

கொடூரம்
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.. பெங்களூரில் உள்ள பிரசிடென்சி கல்லூரி வளாகத்திலேயே வைத்து 19 வயது மாணவி ஒருவர், கத்தியால் கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டார். மாணவியைக் கொலை செய்த பின்னர், இளைஞர் தானும் தற்கொலை செய்து முயன்றுள்ளார். அந்த நபர் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என்ன நடந்தது
உயிரிழந்த அந்த மாணவி லயஸ்மிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பெண்ணை இப்படி கல்லூரி வளாகத்திலேயே வைத்து கொடூரமாகக் கொன்ற மாணவர் பவன் கல்யாண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வேறு ஒரு கல்லூரியில் படிக்கும் அந்த மாணவர் லயஸ்மிதாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அத்துமீறி இந்த கல்லூரிக்குள் நுழைந்துள்ளான். அந்த நபர் மதிய நேரத்தில் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.

வாக்குவாதம்
பவன் கல்யாண் ஏற்கனவே அந்த மாணவியிடம் காதலைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த மாணவி அவரது காதலை நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படியும் தன்னை காதலிக்குமாறும் பவன் கல்யாண் தொடர்ந்து அந்த மாணவியை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இன்று மீண்டும் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து பேசியுள்ளான். வகுப்பிற்கு முன்னால் வைத்து மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொலை
ஒரு கட்டத்தில் கோபமடைந்த மாணவி, அவரிடம் இருந்து நகர முற்பட்டார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த அப்பாவி மாணவியைச் சரமாரியாகக் குத்த தொடங்கியுள்ளான். மாணவியைப் பல முறை இப்படி கத்தியால் குத்திய அந்த மாணவன், அதன் பிறகு தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகே இருந்தவர்கள் வருவதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

காவலாளிகள்
இந்தச் சம்பவத்தைப் பார்த்து மற்ற மாணவிகளும் அலறினர். அப்போது கல்லூரி வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்து ஓடி வந்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியான சிசிடிவி காட்சிகளில் கல்லூரி பாதுகாவலர்கள் காயமடைந்த மாணவியை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல வேகமாக ஓடி வருவது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை
தன்னை காதலிக்குமாறு லயஸ்மிதாவிடம் அந்த மாணவன் பவன் கல்யாண் பிரபோஸ் செய்துள்ளார். இருப்பினும், அந்த மாணவி வேறு ஒருவர் காதலித்து வந்ததாகவும் இதனால் பவன் கல்யாண் காதலை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் இந்த கொடூரத்தை நடத்தியுள்ளான் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications