பெங்களூர் டூ அமெரிக்கா.. ஒரே மெசேஜ் தான்.. வாடகைதாரர்கள், ஹவுஸ் ஓனர் இருவருக்குமே மொத்தமாக அல்வா
பெங்களூர்: வாட்ஸ் அப்பை முடக்கி அதிலிருந்து வேறுநபர்களுக்கு உதவி கேட்பதுபோல் மெசேஜ் அனுப்பி பணம் பறிப்பது அடிக்கடி நடக்கிறது. இன்ஸ்டாகிராம்,இமெயில் உள்பட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் மெசேஜ் அனுப்பி பணம் பறிப்பது நடக்கிறது.பெங்களூரில் வீட்டு உரிமையாளரின் 'வாட்ஸ்-அப்'பை முடக்கி வாடகைதாரர்களிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்திருக்கிறார்கள்.. எப்படி நடந்தது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
வாட்ஸ் அப்பில் பணம் கேட்டு உங்கள் நண்பர்கள் அவசரத்திற்கு அழைப்பதை பார்த்திருப்பீர்கள்..இனி அப்படி யாராவது வாட்ஸ் அப் வழியாக பணம் தருமாறு கேட்டால் ஒரு முறைக்கு இரு முறை யோசியுங்கள். மேலும் போன் நம்பரில் அழைத்து அவர் தான் அனுப்ப சொன்னாரா என்பதை உறுதி செய்யுங்கள். கண் மூடித்தனமாக நம்பி பணத்தை அனுப்பி விட வேண்டாம். பெங்களூரில் ஒருவரின் வாட்ஸ் அப்பை முடக்கி வாடகைதாரர்களிடம் 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது வீட்டின் உரிமையாளரின் பெயரை சொல்லி பணம் வாங்கி வாடகைதார்களுக்கு அல்வா கொடுத்திருக்கிறது ஒரு கும்பல்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

பெங்களூர் அன்னபூர்னேஸ்வரிநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுமனகவுடா என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இதனால் பெங்களூருவில் உள்ள தனக்கு சொந்தமான 2 வீடுகளை அவர் வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த வீடுகளில் குமார் மற்றும் ஸ்வேதா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சுமனகவுடாவின் வாட்ஸ்-அப்பில் இருந்து குமார், ஸ்வேதாவுக்கு ஒரு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில், தான் கூறும் வங்கி கணக்குக்கு பாக்கி மற்றும் மொத்த வாடகை பணத்தை சேர்த்து அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அவர்களும் அந்த வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்தனர்.
பணத்தை கேட்ட உடன் அவர்கள் அமெரிக்காவின் சுமனகவுடாவிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனெனில் வெளிநாட்டில் இருக்கும் அவர், வாட்ஸ் அப் வழியாக பணம் கேட்டிருப்பார் என்று தவறாக நினைத்துக் கொண்டனர். ஆனால் பணம்அனுப்பி பின்னர் இதுபற்றி குமார் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் சுமனகவுடாவை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அப்போது தான் வாடகை பணம் கேட்கவில்லை என்றும், வாட்ஸ்-அப்பில் எந்த தகவலும் அனுப்பவில்லை என்றும் சுமனகவுடா கூறினார். அப்போது தான் அவரது வாட்ஸ்-அப்பை முடக்கி வாடகை கொடுக்கும்படி தகவல் அனுப்பி குமார், ஸ்வேதாவிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.70 ஆயிரத்தை பெற்று மர்மநபர்கள் மோசடி செய்தது அவர்களுக்கு தெரிந்தது. இதுகுறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
எனவே வாட்ஸ் அப்பில் பணம் கேட்டு வாங்கி ஏமாற்றுவது அண்மைக்காலங்களில் அடிக்கடி நடக்கிறது.. எனவே உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது பணம் கேட்டால், போனில் அழைத்து உறுதி செய்யுங்கள். போனில் அல்லது நேரில் உறுதி செய்யாமல் ஜிபே அல்லது வேறு கணக்கில் பணம் அனுப்பி விட வேண்டாம்.












Click it and Unblock the Notifications