"மாடல்".. பல மாநில தேர்தல்களில்.. வாக்குறுதியாக மாறும் திமுகவின் திட்டங்கள்! கர்நாடகாவிலும் ட்விஸ்ட்
பெங்களூர்: தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக மூலம் கொடுக்கப்பட்டு ஹிட் அடித்த வாக்குறுதிகளை பல்வேறு மாநில தேர்தல்களில் வேறு கட்சிகள் வாக்குறுதிகளாக கொடுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் திமுகவின் சில வாக்குறுதிகள் அங்கே உள்ள கட்சிகளால் கொடுக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதே திட்டத்தை அங்கே காங்கிரஸ் வாக்குறுதியில் அறிவித்துள்ளது.
அதன்படி க்ருஹ லக்ஷ்மி திட்டம்: இந்த திட்டம் மூலம் 2000/மாதம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம்.
க்ருஹ ஜோதி திட்டம்: இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம். தமிழ்நாட்டில் ஏற்கனவே 100 யூனிட் மின்சார இலவச திட்டம் உள்ளது. திமுகவின் இதே திட்டத்தை ஆம் ஆத்மியூம் பஞ்சாப், டெல்லியில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
திமுக பெண்கள் வாக்குகளை வெல்ல காரணமாக இருந்த இந்த திட்டத்தை அங்கே கர்நாடகாவில் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

இமாச்சல பிரதேசம்:முன்னதாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கேயும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.
பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இலவச பேருந்து:காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முதல் நாளில் இருந்தே அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இது தமிநாட்டில் கொண்டு வரப்பட்ட ஹிட் அடித்த திட்டம் ஆகும். திமுகவின் இதே வாக்குறுதி அங்கே காங்கிரஸ் மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசம்:காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவும் இதே போன்ற வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. கடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வென்றது. இதில் பாஜக கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் பல திமுக ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்கள் ஆகும்.
உதாரணமாக விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. 1989ல் தமிழ்நாட்டில் விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் சில கட்டுப்பாடுகளால் எதிர்ப்புகள் வந்தாலும் அதை எல்லாம் மீறி அப்போதைய திமுக அரசு இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

அதாவது 33 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் "விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு, அது நிறைவேற்றவும் பட்டது. அந்த வாக்குறுதியைத்தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வழங்கி உள்ளது.
33 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட விவசாய பாசனத்திற்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பாஜக இத்தனை ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசத்தில் வாக்குறுதியாக அறிவித்தது.
இது போக கல்லூரி பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பாஜக உத்தர பிரதேசத்தில் அறிவித்தது. இதுவும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். தமிழ்நாட்டில் பெண்கள் அனைவருக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது போல உத்தர பிரதேசத்தில் 60 வயது தாண்டிய பெண்களுக்கு பொதுப்போக்குவரத்து இலவசம் என்று பாஜக அறிவித்தது. இதுவும் தமிழ்நாட்டில் திமுக மூலம் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.












Click it and Unblock the Notifications