இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூர் ஏரோ இந்தியா 2023.. ஆன்லைனிலேயே டிக்கெட் வாங்கலாம்
இந்திய விமானப்படையின் பலத்தைப் பறைசாற்றுவதோடு மட்டுமல்லாமல் நமது போர் விமானங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பாகவும் இந்த விமானக் கண்காட்சியை மத்திய அரசு நடத்துகிறது.
பெங்களூர்: பெங்களூரில் நடைபெறும் விமானக் கண்காட்சி மற்றும் சாகசங்களைக் காண விரும்புவோர் ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியாவை பார்க்க ஆயிரக்கணக்கானோர் பெங்களூருக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்திய விமானப்படையின் திறனையும், பலத்தையும் பறைசாற்றும் இந்த கண்காட்சியானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஏரோ இந்தியா 2023
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள யெலஹங்கா விமானப்படைத் தளத்தில் 'ஏரோ இந்தியா 2023' என்ற பெயரில் இந்த பிரம்மாண்ட விமானக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வான்வெளியில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியையும், பாதுகாப்பு திறனையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

வலிமையைப் பறைசாற்றும் கண்காட்சி
இந்தக் கண்காட்சியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பல வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த கண்காட்சியில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இந்திய விமானப்படையின் பலத்தை பறைசாற்றுவதோடு மட்டுமல்லாமல் நமது போர் விமானங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பாகவும் இந்த விமானக் கண்காட்சியை மத்திய அரசு நடத்துகிறது.

எத்தனை நாடுகள் பங்கேற்பு?
மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கண்காட்சியில் 98 நாடுகள் நாடுகள் பங்கேற்றுள்ளன. 32 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானப் படை தலைமை தளபதிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதைத் தவிர, ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் 73 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

டிக்கெட் வாங்குவது எப்படி?
இந்த விமானக் கண்காட்சியையும், போர் விமானங்களின் சாகசங்களை வரும் 16, 17 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் காண முடியும். கண்காட்சி நடைபெறும் இடத்தில் இருந்து இந்த சாகச நிகழ்ச்சியைப் பார்க்க ரூ.2,500-க்கு டிக்கெட் வாங்க வேண்டும். வெளிநாட்டினருக்கு இந்த டிக்கெட் 50 டாலருக்கு (ரூ.4,137) விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, ஏடிவிஏ டிக்கெட் அதாவது சற்று தொலைவில் இருந்து விமானங்களைப் பார்ப்பதற்கு ஒருவர் ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும். வெளிநாட்டினருக்கு அதே 50 டாலருக்கு டிக்கெட் விற்கப்படும். 14 முதல் 17-ம் தேதி வைர இந்த டிக்கெட்டுகள் கிடைக்கும். மேலும், பிஸ்னஸ் டிக்கெட்டுகள் ரூ.5000-க்கும், வெளிநாட்டினருக்கு 150 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்டை பெற்றுக் கொள்பவர்கள், 14 முதல் 15-ம் தேதி வரை விமானக் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்வையிடலாம். இந்த டிக்கெட்டுகளை aeroindia.gov.in என்ற இணைய முகவரியில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications