இந்தி பேசியதால் பார்க்கிங் மறுப்பு.. பெங்களூர் கூகுள் இன்ஜினியருக்கு நேர்ந்த கதி.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரில் கன்னடம் பேசாமல் இந்தி மொழியில் பேசியதால் என்னை பார்க்கிங் செய்ய விடாமல் தடுத்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறி கூகுள் இன்ஜினியர் அர்பித் பயானி பரபரப்பை கிளப்பி உள்ளார். பெங்களூரில் வசித்து வருபவர் அர்பித் பயானி. இவர் கூகுள் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கர்நாடகாவில் தற்போது மொழி தொடர்பான பிரச்சனை உள்ளது. கன்னட மொழியை வெளிமாநிலத்தவர்கள் புறக்கணிப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் கன்னட மொழியை உடனடியாக கற்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தி மொழியில் தள்ளி நிற்கும்படி கூறியதால் பார்க்கிங் இடம் தனக்கு மறுக்கப்பட்டதாக கூகுள் இன்ஜினியர் அர்பித் பயானி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அர்பித் பயானி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று நான் ஒருவரை இந்தி மொழியில் சற்று தள்ளி நிற்கும்படி கூறினேன். இதையடுத்து எனக்கு பார்க்கிங் இடம் மறுக்கப்பட்டது. அங்கு நடந்தது பரவாயில்லை. நான் சொல்வதை கேளுங்கள்.
மகாராஷ்டிரா, கர்நாடகா அல்லது வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பது பற்றி பேசும் அனைவரிடமும் நீங்கள் உண்மையில் உங்கள் குழந்தைகளை பிராந்திய மொழியில் பாடம் கற்பிக்கும் பள்ளிகளில் தான் சேர்க்கிறீர்களா? அல்லது அவர்கள் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கிறார்களா? என்று கேளுங்கள்.
இப்போதைய இளம் தலைமுறையினர் தங்களின் தாய் மொழியை விட ஆங்கிலத்தில் பேசுவதை வசதியாக கருதுகிறார்கள். கிராமப்புறங்களும் அதை பின்பற்றுகிறது. நாடு முழவதும் ஆங்கிலம் பொதுவாக பயன்படுத்தப்படும் மொழியாக மாறும் காலத்திற்கு நாம் சில தலைமுறைகளின் தொலைவில் தான் இருக்கிறோம். மேலும் நான் அனைவரையும் ஆங்கிலத்தில் பேச சொல்வில்லை. ஆங்கிலம் என்பது ஓரளவு அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரே மொழியாக இருக்கலாம்.
நீங்கள் என் கருத்துடன் உடன்பாட்டால் அருமையான விஷயம் அது. மாறாக முட்டாள்தனமான முடிவு என்று நீங்கள் கருதினால் நான் இந்தியில் பேசியதால் பார்க்கிங்கிற்கு மறுக்கப்பட்ட சம்பவம் என்பதும் பைத்தியக்காரத்தனம் தான்'' என்று கூறியுள்ளார்.
இந்த மொழிப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் தான். அதாவது பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யா நகரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை உள்ளது. இங்கு மேலாளராக இருக்கும் பெண் ஒருவருக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அந்த பெண் மேலாளர் ‛‛கன்னட மொழியை பேச மாட்டேன். இது இந்தியா. இந்தியில் தான் பேசுவேன்'' என்று ஆங்கில மொழியில் கூறினார்.
இதற்கு வாடிக்கையாளர், ‛‛இது கர்நாடகா. கன்னடத்தில் தான் பேச வேண்டும். ஆர்பிஐ விதியே உள்ளது'' என்று கூறினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த இந்த பிரச்சனை விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து அந்த பெண் மேலாளரை எஸ்பிஐ நிர்வாகம் இடமாற்றம் செய்ததோடு, நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கன்னடம் தெரியாததால் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் கன்னட மொழி தொடர்பான பிரச்சனை தற்போது வலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications