பெங்களூரில் சுட்டெரிக்கும் சூரியன்! குடிநீரில் காரை கழுவினால் ரூ 5 ஆயிரம் அபராதம்! ஏன் என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கோடை காலம் தொடங்கும் முன்னே வெப்பம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, குடிநீரில் காரை கழுவுதல், மால்கள், சினிமா தியேட்டர்களை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் பெங்களூரும் உண்டு. இங்கு தகவல் தொழில்நுட்பத்துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இங்கு ஏராளமான ஐடி ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

கிட்டதட்ட ஐடி ஹப் என சொல்லும் அளவுக்கு இங்கு நிறைய முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அது போல் கட்டட வேலை, ஹோட்டல் பணி, கூலித் தொழில், எலக்ட்ரானிக் வேலை, எலக்ட்ரிக்கல் வேலை, மின் சாதன பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் மக்களும் வெளிமாநில, மாவட்ட மக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு சென்னையை விட கூடுதல் சம்பளம் கிடைக்கும். அதே வேளையில் cost of living என சொல்லப்படும் வாழ்வாதாரத்திற்கான செலவுகள் அதிகம் ஆகும். இவ்வாறு பல மொழிகளை பேசும் மக்கள் இங்கு வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது.
பெங்களூரில் எப்போதும் இதமான வானிலை நிலவும் என்பார்கள். ஆனால் அண்மைக்காலமாக எல்லாமே தலைகீழ், மழையாக இருந்தாலும் வெயிலாக இருந்தாலும் கொட்டியும் வாட்டியும் எடுத்துவிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
பாதாளத்தில் நிலத்தடி நீர்
இதனால் ஏப்ரல், மே என சொல்லக் கூடிய கோடை காலம் பிப்ரவரியிலேயே தொடங்கி விடுமோ என அஞ்சப்படுகிறது. மேலும் அதாவது தலைநகர் டெல்லியை காட்டிலும் அதிகமாக வெப்பநிலை இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டும் பல்வேறு இடங்களில் குறைந்துள்ளது.
தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது
இதை கருத்தில் கொண்டு கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வாரியம் முக்கிய தடையை விதித்துள்ளது. அதாவது குடிநீரை கொண்டு இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், கட்டுமான பணிக்கு குடிநீரை பயன்படுத்துதல், அலங்கார நீர் ஊற்றுகளுக்கு குடிநீர் பயன்படுத்துதல், மால்கள், சினிமா தியேட்டர்களை சுத்தப்படுத்துதல், தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது.
5 ஆயிரம் அபராதம்
அதாவது குடிநீரை கொண்டு இந்த வேலைகளை செய்யக் கூடாது. மீறினால் பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரிய சட்டத்தின் கீழ் ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் திரும்ப திரும்ப செய்துக் கொண்டே இருந்தால் கூடுதலாக ரூ 500 வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
110 கிராமங்களுக்கு தட்டுப்பாடு
இந்திய அறிவியல் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் 110 கிராமங்கள் உள்பட 80 வார்டுகள் நிலத்தடி நீரை பெரிதும் நம்பியே உள்ளன. எனவே அந்த வார்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. இதையடுத்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண மாற்று வழியை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் குடிநீர் வழங்கல் வாரியம் இருக்கிறது.
குடிநீர் பற்றாக்குறை
இதே போல் கடந்த ஆண்டு பெங்களூரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போதும் குடிநீரை வீணடிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கழிப்பறைகளுக்கு கூட அந்த தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பலர் தங்கள் பிஜி,ஹாஸ்டல்களிலும் வீடுகளிலும் தண்ணீர் இல்லாமல் தவித்தனர்.
கோடை 2024
மேலும் பல்வேறு நிறுவனங்களும் வொர்க் ஃபிரம் ஹோம் ஆப்ஷன் கொடுத்தது. இதனால் வெளியூர்காரர்கள் சொந்த ஊர்களில் பணியாற்றினர். ஆனால் உள்ளூர்காரர்கள் தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். அது போன்றதொரு நிலை வரக் கூடாது என்பதற்காக இப்போதே மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியம் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications