24 வீடு + 40 ஏக்கர் நிலம்.. மாதம் ரூ.15,000 சம்பளம் பெற்ற கிளர்க்கின் சொத்தை பாருங்க.. ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிகமாக அரசு துறையில்கிளர்க்காக பணியாற்றி வந்த ஒருவர் 24 வீடு, 40 ஏக்கர் விவசாய நிலம் உள்பட ரூ.30 கோடிக்கு சொத்து சேர்த்து இருப்பது அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதனை லோக்ஆயுக்தா கண்டுபிடித்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக கேஆர்ஐடிஎல் என்று அழைப்பார்கள். இந்த நிறுவனம் கர்நாடகா கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கேஆர்ஐடிஎல்லின் கொப்பல் மாவட்டம் நிலோஜிபுரா சப்டிவிஷன் அலுவலகத்தில் தற்காலிகமாக கிளர்க்காக பணியாற்றி வந்தவர் கலகப்பா நிடகுந்தி. தற்காலிக பணி என்பதால் அவருக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் மாதம் ரூ.15 ஆயிரம் அவருக்கு சம்பளமாக கிடைக்கும்.
இந்நிலையில் தான் அவர் மீது முறைகேடு புகார் எழுந்தது. அதாவது கலகப்பா கேஆர்ஐடிஎல் இன்ஜினியர் சின்சோல்கருடன் சேர்ந்து 96 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு போலி பில்களை தயாரித்து ரூ.72 கோடிக்கு மேலாக முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கலகப்பா பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் முறைகேடு புகார் தொடர்பாக லோக்ஆயுக்தா போலீசில் புகார் செய்யப்பட்டது. லோக்ஆயுக்தா போலீசார் சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். வருமானத்தை மீறி அதிக சொத்து மற்றும் முறைகேடு செய்த அரசு அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கலகப்பாவின் வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்தன. சோதனை முடிவில் நகை, பணம், ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கலகப்பாவுக்கு இருக்கும் சொத்து மதிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அதாவது அரசு நிறுவனத்தில் தற்காலிகமாக ரூ.15 ஆயிரம் மாத சம்பளத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்த கலகப்பாவுக்கு மொத்தம் ரூ.30 கோடிக்கு சொத்துகள் உள்ளன. 24 வீடுகள், 40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 4 வீட்டு மனைகள் உள்ளது. அதேபோல் 350 கிராம் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி நகைகள், 2 கார்கள், 2 டூவீலர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கலகப்பா தனது பெயர் மட்டுமின்றி மனைவி மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது அனைவரையும் மிரள வைத்துள்ளது. இந்த சொத்துகள் தொடர்பாக லோக்ஆயுக்தா அதிகாரிகள் கலகப்பாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications