இரவில் திடீரென உடைந்த மதகு.. கர்நாடகாவின் மிகப்பெரிய துங்கபத்ரா அணையால் ஆபத்து.. பெரும் வெள்ளம்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள மிகப்பெரிய அணையான துங்கபத்ராவில் 19வது மதகின் செயின் லிங்க் திடீரென்று உடைந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று துங்கபத்ரா. பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் துங்கபத்ரா ஆற்றின் குறுக்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை தான் கர்நாடகாவில் மிகப்பெரிய அணையாகும். கடல் மட்டத்தில் இருந்து 1,633.00 அடி உயரம் கொண்ட துங்கபத்ரா அணையில் அதிகபட்சமாக 105.788 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
இந்த அணை என்பது 70 ஆண்டு பழமையானது. மொத்தம் 33 மதகுகள் உள்ளன. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையில் 1,632.60 அடிக்கு தண்ணீர் இருந்தது. அதாவது 104.18 டிஎம்சி தண்ணீர் நிரம்பியிருந்தது. முழு கொள்ளவை நெருங்கிய நிலையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு உள்ளே 36,739 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 54,960 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அணையின் 19வது மதகின் செயின் லிங்க் திடீரென்று உடைந்தது. இந்த செயின் லிங்க் தான் மதகின் ஷட்டருக்கு பலமாக இருக்கும். தற்போது மதகின் செயின் லிங்க் அறுந்ததால் 19வது மதகு முழுவதும் தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதுபற்றி அறிந்தவுடன் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அமைச்சர் சிவராஜ் தங்கடகி அணை பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அணையில் அதிகளவில் தண்ணீர் உள்ளதால் உடனடியாக அந்த மதகை சரிசெய்ய முடியாத நிலையை அவர்கள் உணர்ந்தனர். மேலும் அணையில் இருந்து 60 டிஎம்சி தண்ணீர் (60 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர்) வெளியேறிய பிறகு தான் மதகை சரிசெய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 60 டிஎம்சி தண்ணீரை விரைவாக வெளியேற்ற அணையின் அனைத்து மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அதன் கரையோர பகுதிகளில் வெள்ளம் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பல்லாரி, கொப்பல், ஒசப்பேட்டே, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
