அதிகபட்ச இறப்புகளில்.. டெல்லியை பின்னுக்கு தள்ளிய கர்நாடகா.. 17 நாளில் 6,790 பேர் உயிரிழப்பு!
பெங்களுரு: கர்நாடகா மாநிலத்தில் கடந்த 17 நாட்களில் மட்டும் 6,790 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆறுதல் அளிக்கும் படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கர்நாடகா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 30,309 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 525 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு அதிகரிப்பு
கர்நாடகாவில் தினசரி பாதிப்புகள் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், தினசரி உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் வெறும் 17 நாட்களில் 6,790 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. அதாவது மே மாதத்தில் மட்டும் சராசரியாக தினமும் 400 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அதுவும் மாநில தலைநகர் பெங்களுருவில்தான் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இரண்டாவது இடம்
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 525 இறப்புகளில் பெங்களுருவில் மட்டும் 317 பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கர்நாடகா மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 22,313 பேர் உயிழந்துள்ளனர். இதன் மூலம் அதிக உயிரிழப்பில் கர்நாடக மாநிலம் டெல்லியை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிரா 83,777 உயிரிழப்புகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

தரவுகள் காட்டுகின்றன
கர்நாடக மாநிலத்தில் இந்த மாதத்தில் தினசரி சராசரியாக 59,395 பேர் குணமடைந்துள்ள நிலையில் சராசரியாக தினமும் 30,000 பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸுக்கு 93,247 மாதிரிகளே சராசரியாக பரிசோதிக்கப்படுகின்றன. இது மிகவும் குறைவானதாகும் என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. சரியான சிகிச்சைகள் மூலம் தினசரி உயிரிழப்புகளை குறைக்க முயற்சித்து வருவதாக கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத்நாராயண் தெரிவித்தார்.

குழந்தை பராமரிப்பு மையங்கள்
கொரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பராமரிக்கப்படும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை, தரமான உணவு வழங்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனாவால் பெற்றோர்களை இழந்து அனாதையாக இருக்கும் 18 வயது வரையிலான குழந்தைகளை மறுவாழ்வு செய்யவும், 30 மாவட்டங்களில் சிறப்பு குழந்தை கொரோனா பராமரிப்பு மையங்களை அமைக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications