பாலியல் வழக்கு.. நாட்டையே அதிர வைத்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெயிப்பாரா? எக்சிட் போல் சொல்வது என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா ஹசான் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வின்னிங் சான்ஸ் எப்படி உள்ளது என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் ஹாசன் லோக்சபா தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரஜ்வல் ரேவண்ணா. மீண்டும் அந்த தொகுதியில் அவர் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கியதால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்னா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான், பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியில் இந்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அதே தொகுதியில் சிட்டிங் எம்பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேலை வீழ்த்துவார் என்று இந்தியா டுடே எக்சிட் போலில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர் ஏ மஞ்சுவை பிரஜ்வல் ரேவண்னா 1.4 லட்சம் வாக்குக்ள் வித்தியாசத்தில் வென்றார். 2019-ஆம் ஆண்டு ஜேடிஸ் - பாஜக கூட்டணி வைக்கவில்லை.
இதே தொகுதியில் 2014 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதாவது பாஜக கூட்டணி 20-22 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்றும் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் 3-5 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஹாசன் தொகுதிக்கு வக்குப்பதிவு நடந்த நிலையில், அதற்கு மறுநாளே பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகின. பிரஜ்வல் ரேவண்ணா ஏராளமான பெண்களை மிரட்டி வீடியோ காலில் ஆபாசமாக பேசியதோடு, சிலரை பலாத்காரம் செய்து வைத்திருந்த வீடியோக்களும் வெளியானது.
கர்நாடக அரசியலில் மட்டும் இன்றி நாடு முழுக்க இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோக்கள் வெளியாவதற்கு முந்தைய நாள் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி புறப்பட்டு சென்றார். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டது. பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அவர் மீது 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி. போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். 7 நாட்கள் காலஅவகாசம் கோரிய அவர் அதன் பிறகு நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
நீதிமன்றம் மூலம் கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு பெங்களூர் வந்தார். அவரை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரஜ்வல் ரேவண்னாவை கஸ்டடியில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications