நிலவில் 'மாக்மா கடல்..' உலகை திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3-ன் புதிய கண்டுபிடிப்பு.. ஆஹா
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் இறங்கி சந்திரயான் 3 உலகையே திரும்பி பார்க்க வைத்தது. தற்போது நிலவில் ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான் 3, அங்கு மாக்மா கடல் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளது. மாக்மா கடல் என்பது உருகும் பாறையின் பெரிய அடுக்குகள் ஆகும். பொதுவாக கோள்கள் உருவாகும் போது இவை காணப்படும். இந்த மாக்மா கடல் 4.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகியிருக்கலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் இஸ்ரோவும் முன்னிலையில் உள்ளது. பூமியை தாண்டி வேறு கிரகங்களில் மக்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா? என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பது பற்றிய ஆய்வுகளை உலக நாடுகள் தொடங்கி உள்ளன. இந்தியா சார்பில் சந்திரயான் திட்டம் மூலம் நிலவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்திரயான் திட்டங்களின் மூலம் இஸ்ரோ நிலவு குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதில் சந்திரயான் -1 திட்டம் வெற்றி பெற்றது. சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கியபோது விழுந்து நொறுங்கியது. இருந்தாலும் சறுக்கலில் இருந்து மீண்டு வந்த இஸ்ரோ, சந்திரயான் -3 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் கடந்த ஆண்டு தரையிறங்கி சாதித்து காட்டியது.
தென் துருவத்தில் வேறு எந்த நாடும் சாப்ட் லேண்டிங் செய்யாத நிலையில், இந்தியாவின் இஸ்ரோ செய்த இந்த சாதனை உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இஸ்ரோ செய்த இந்த சாதனை மூலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதனிடையே, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திராயன்-3 மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவியாக அமைந்துள்ளது. அதாவது, நிலவின் தென் துருவத்தில் ஒரு காலத்தில் ஒரு பெரிய மாக்மா கடல் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை சந்திராயன்-3 ரோவர் பிரக்யான் கண்டறிந்து இருக்கிறது.
சந்திரயான்-3 லேண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று மான்சினஸ் பள்ளம் அருகே சந்திரனின் மேற்பரப்பில் சென்றவுடன், ரோவர் பிரக்யான் உடனடியாக அதன் சரிவு பாதையில் இருந்து தெற்கு பகுதியை ஆய்வு செய்ய தொடங்கியது. இந்த இடத்தில்தான் மென்மையான மேற்பரப்புகள் இருந்துள்ளது. அதாவது, அந்த பகுதியில் பள்ளங்கள், பாறைகள் என எதுவும் இல்லை.
எனவே, அங்கு மிகப்பெரிய மாக்மா கடல் இருந்து இருக்கலாம் என்று இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 அனுப்பி நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, நிலவு குறித்து சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல்களை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் வெளியிட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் நேச்சர் இதழிலில் வெளியிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications