இந்த போட்டோவை பார்த்தீங்களா? 70 கி.மீ உயரத்தில் கிளிக்..நிலவில் தரையிறங்க சந்திரயான் 3 லேண்டர் ரெடி
பெங்களூர்: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், நாளை மாலை நிலவின் தென் துருவ பகுதியில் இறங்கி வரலாற்று சாதனை படைக்க உள்ள நிலையில், அது 70 கி.மீ தொலைவிலிருந்து நிலவை எடுத்த போட்டோக்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், நிலவில் நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல மிகவும் அரிதான கனிமங்கள் கூட நிலவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே நிலவை ஆக்கிரமிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சேர்ந்திருக்கிறது.

நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீரை அமெரிக்காவின் நாசாவே கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து சொன்னது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது.
இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113x157 கி.மீ என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து 20ம் தேதி அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி இருக்கையில் விக்ரம் லேண்டர் நிலவுக்கு 70 கி.மீ உயரத்தில் இருக்கும் போது லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா (LPDC) மூலம் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறது.

இதனை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றன. அதேபோல சந்திரயான் 3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது, விக்ரம் லேண்டர் வழக்கமான பரிசோதனைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறங்குகிறது. இதற்கான செயல்பாடுகளை இஸ்ரோ லைவாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.
எனவே நாளை மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் (https://youtube.com) இஸ்ரோவின் இணையதளம் (https://isro.gov.in) மற்றும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ Facebook சேனல் (https://facebook.com/ISRO) ஆகியவற்றில் நேரலையில் இது டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications