ஜெகதீஷ் ஷெட்டரை எதிர்த்து போட்டி.. மடாதிபதி முன் மண்டிப்போட்ட பாஜக வேட்பாளர்.. என்னாச்சு? வீடியோ
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பாடாததால் பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்து உப்பள்ளி-தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்த பாஜக சார்பில் மகேஷ் தென்கின்காய் களமிறங்கிய நிலையில் அவர் லிங்காயத் மடாதிபதி முன்பு முட்டிப்போட்டு நின்ற வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் 3 கட்டங்களாக மொத்தம் 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இன்னும் 2 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது.

பாஜக சார்பில் இந்த முறை 10க்கும் அதிகமான சிட்டிங் எம்எல்ஏக்களுக்கும், பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் அதிருப்தியடைந்து மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.
குறிப்பாக தார்வாட் மாவட்டம் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் மூத்த தலைவரான இவர் தற்போது அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 சட்டசபை தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். அதுவும் கைக்கொடுக்கவில்லை.

இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து உடனடியாக காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் வழங்கப்பட்டது. இது பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த சமூகம் தான் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. இந்நிலையில் ஜெகதீஷ் ஷெட்டரின் கட்சி மாற்றம் பாஜகவுக்கு மைனஸாக மாறலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பாஜக சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். அதன்படி பாஜகவின் வேட்பாளராக மகேஷ் தென்கின்காய் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டரை எப்படியாவது இந்த தொகுதியில் வீழ்த்த வேண்டும் என மகேஷ் தென்கின்காய் திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மடாதிபதிகளை சந்திக்க தொடங்கி உள்ளார்.

இன்று மகேஷ் தென்கின்காய் உப்பள்ளியில் உள்ள மூன்றுசாவிர்(மூன்றாயிரம்) மடத்துக்கு சென்றார். அங்கு அவர் மடாதிபதி மன்மகாராஜ் நிரஞ்சன் குருசித்த ராஜயோகிந்த் மகாசுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கின்காய் மடாதிபதியின் முன்பு முட்டுப்போட்டு நின்றார். இதை பார்த்த மடாதிபதி சைகை மூலம் அவரை எழுப்பி துண்டு, மாலை அணிவித்து ஆசி வழங்கினார்.
இதுபற்றி மடாதிபதி மன்மகாராஜ் நிரஞ்சன் குருசித்த ராஜயோகிந்த் மகாசுவாமி கூறுகையில், ‛‛லிங்காயத் சமுதாயம் மாநிலத்தில் மிகப்பெரிய சமுதாயமாக உள்ளது. 2 முறை அனைத்து லிங்காயத் சமுதாயத்தினரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். இந்த முறையும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் '' என்றார்.












Click it and Unblock the Notifications